இந்திய விண்வெளி வரலாற்றில் இன்று மிகவும் முக்கியமான நாளாக மாறியுள்ளது. அதற்கு முழுக்காரணமும் நிலவில் தரையிறங்க ஆயத்தமாகியுள்ள சந்திராயன் 3 விண்கலம் தான்.
சில தினங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் Luna-25 நிலவில் தரையிறங்குவதற்கு முன்னால் தொழில்நுட்ப கோளாறால் வெடித்துச் சிதறிய நிலையில் இஸ்ரோவின் சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறங்குமா என உலகின் ஒட்டுமொத்த கவனமும் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.
சந்திராயன் 3 திட்டம் வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா மாறும். இத்தகைய சிறப்புமிக்க தருணத்தை அனைவரும் காணும் வகையில் சமூக ஊடக தளங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களின் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பை எப்படி பார்ப்பது?
தரையிறங்கும் நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு இன்று மாலை 5:20 மணிக்கு (IST) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரையிறங்குவதற்கான நேரடி நடவடிக்கைகள் இஸ்ரோ இணையதளம், அதன் யூடியூப் சேனல், பேஸ்புக் மற்றும் டிடி நேஷனல் தொலைக்காட்சியின் வாயிலாகவும் ஆகஸ்ட் 23 அன்று மாலை 5:27 (IST) முதல் ஒளிபரப்பு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ இணையதளத்தின் நேரடி ஒளிபரப்பு இணைப்புக்கு இந்த லிங்கினை கிளிக் செய்யவும்.
சந்திராயன்-3 கடந்து வந்த பாதை:
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை 14 ஆம் தேதி, இஸ்ரோவின் சார்பில் சந்திராயன் -3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
இந்நிலையில் ஏவப்பட்ட விண்கலமானது, “நிலவின் சுற்றுப்பாதை நுழைவினை (LOI- Lunar Orbit Insertion) வெற்றிகரமாக நிறைவு செய்து நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதை சூழ்ச்சி (Lunar bound orbit) (ஆகஸ்ட் 06, 2023) அன்று சுமார் 23:00 மணி IST மணிக்கு திட்டமிடப்பட திறம்பட செயல்பட்டது.
அவற்றின் தொடர்ச்சியாக நிலவின் சுற்றுவட்டப்பாதையினை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை தொடங்கியது. திட்டமிட்டப்படி அனைத்தும் சிறப்பாக செயல்பட்ட நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதியான இன்று மாலை நிலவில் சந்திராயன் -3 தரையிறங்க உள்ளது.
விண்கலத்தின் அனைத்து அமைப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள ISRO டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் (ISTRAC) உள்ள மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளக்ஸ் (MOX)-லிருந்து விண்கலத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
சந்திரயான்-3 என்பது நிலவினை ஆராயும் இஸ்ரோவின் திட்டத்தில் மூன்றாவது பணியாகும். இது முன்னதாக நிலவை நோக்கி அனுப்பப்பட்ட சந்திரயான்-2 திட்டத்தின் தொடர் பணியாகும். இத்திட்டத்தின் நோக்கமானது நிலவின் மேற்பரப்பில் ஒரு மென்மையான தரையிறக்கத்தை விண்கலமானது வெற்றிகரமாக நிகழ்த்தி ஒரு ரோவரை நிலைநிறுத்தும். இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் மாதிரிகளை சேகரித்து நிலவு குறித்து பல புதிய தகவல்களை கண்டறிய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: ISRO
மேலும் காண்க: