சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கான மொத்த QR டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிகழ்வு அழைப்பிதழ்களில் மெட்ரோ QR குறியீடு பயணச்சீட்டு:
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கான பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கு மொத்த QR பயணச்சீட்டு முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுமையான முயற்சியானது, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் / பங்கேற்பாளர்களுக்கு நிகழ்வு அழைப்பிதழ்களில் மெட்ரோ இரயிலின் அச்சிடப்பட்ட QR குறியீடுகள் போடப்பட்ட பயணச்சீட்டை வழங்குகிறது. இதன் மூலம் அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் எவ்வித கட்டணமுமின்றி மெட்ரோ இரயில்களில் பயணிக்கலாம்.
முதன் முயற்சியாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஜீஃபோ டெக்னாலஜிஸ் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஜிஃபோ டெக்னாலஜிஸில் நடைபெற்ற பணியாளர்களின் குடும்ப சந்திப்பு நிகழ்விற்கான அழைப்பிதழ்களில் முன்பதிவு செய்யப்பட்ட 5,000 QR குறியீடு பயணச்சீட்டுகளை அச்சிட்டுள்ளது. இது நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை வழங்கியதோடு அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லவும் வசதியாக இருந்தது.
இந்த புதிய முன்பதிவு செய்யப்பட்ட QR குறியீட்டு டிக்கெட்டுகளின் அறிமுகமானது மெட்ரோ பயணச்சீட்டில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது என மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம், வசதி மற்றும் பொது மக்களின் நலனுக்காக இந்த முயற்சியை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சென்னைவாசிகள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளிக்கு ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்த புதுமையான தீர்வுகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது. கார்ப்பரேட் மூலம் மொத்த முன்பதிவு செய்யப்பட்ட QR குறியீட்டு டிக்கெட்டுகளின் அறிமுகமானது பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, வசதியான மற்றும் திறமையான போக்குவரத்து வசதியை பயணிகளுக்கு வழங்குகிறது.
மொத்தமாக QR பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாது பொதுமக்களும் இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு மொத்தமாக QR பயணச்சீட்டு பெற முன்பதிவு செய்வதற்கும், கூடுதல் தகவல்களுக்கும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் Imc@cmrl.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும். (Subject marked as: Bulk /Corporate ticket pre-booking).
மெட்ரோ இரயில் சேவையினை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனமும் பார்க்கிங் கட்டணம் தள்ளுபடி, பயண டிக்கெட்டில் கட்டணத் தள்ளுபடி என தொடர்ச்சியாக பயணிகளுக்கு சலுகையினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: CMRL
மேலும் காண்க:
கரண்ட் பில் எடுக்க யாரும் வரமாட்டாங்க- ஸ்மார்ட் மீட்டர் குறித்து அமைச்சர்!