வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையில், விதி எண்.110-ன் கீழ் சில அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இந்திய ஒன்றியம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும், இந்திய மக்களின் பட்டினிச் சாவைத் தடுப்பதற்கும் 1960-களில் பசுமைப் புரட்சித் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவரான வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் சமீபத்தில் (28-9-2023) வயது மூப்பின் காரணமாக மறைந்தார். இந்நிலையில் அவரின் பணிகளை நினைவுகூறும் வகையில் சில அறிவிப்புகளை முதல்வர் தெரிவித்து உரையாற்றினார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
வேட்டைச் சமூகமாக இருந்த மனித இனம் வேளாண் தொழிலைத் தேர்ந்தெடுத்தது என்பது மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்பதுடன் அறிவியல் வளர்ச்சியின் அடையாளமும் ஆகும். வேளாண் அறிவியலை இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி உலகளவில் புகழ் பெற்றவர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள்.
இன்று காலநிலை மாற்றம்தான் பெரிய பிரச்சினையாக மாறிக் கொண்டு இருக்கிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து, காலநிலை மாற்றம் குறித்து 1969 ஆம் ஆண்டிவேயே இந்திய அறிவியல் மாநாட்டில் பேசி இருக்கிறார். உலகம் அதிகமாக வெப்பமாவதால் கடல் மட்டம் உயரும் என்பதையும் 1989-ஆம் ஆண்டு டோக்கியோ மாநாட்டில் எச்சரிக்கை விடுத்தார்.
பத்ம விருதுகள், ரமோன் மகச்சே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் நினைவைப் போற்றுகிற வண்ணம் கீழ்காணும் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
தஞ்சை வேளாண் கல்லூரி பெயர் மாற்றம்:
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும். அதேபோல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் தனது இறுதிக்காலத்திலும் சென்னையில் தரமணியிலுள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் வேளாண் சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு, சட்டமன்றத்தில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக வரவேற்பு அளித்தனர். வேளாண் மாணவர்களுக்கு மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுத்தோறும் விருது அளிக்கப்படும் என்ற உத்தரவும், வேளாண் கல்லூரி மாணவர்களிடையே ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது.
இதையும் காண்க:
ரேசன் கடைக்கு பொருள் வாங்க குடும்பத்தோடு வரணுமா? அமைச்சர் விளக்கம்
கார்டு மேல இனி அந்த 16 நம்பர் இருக்காதா? ஆக்ஸிஸ் வங்கி அசத்தல்