தேங்காய் கொள்முதல் விலை ரூ.10 ஆக சரிந்துள்ளதால், தென்னை விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஊரடங்கு காலத்தை விட மிக மோசமாக விலை குறைந்துள்ளதால், விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில், 1.45 லட்சம் ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னைக்கான 'சீசன்' என்பது கோடை காலம் ஆகும். கோடை உச்சமடையும் பருவத்தில், தேங்காய் உற்பத்தியும் அபரிமிதமாக இருக்கும். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகபட்சமாக இருக்கும். வரத்து அதிகம் காரணமாக, விலை சற்றுக் குறைவது வழக்கம் என்றாலும் நடப்பாண்டில் ஏற்பட்டுள்ள விலை சரிவு, மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தேங்காய் விலை (Coconut price)
எண்ணிக்கையில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், ஒரு தேங்காய், ரூபாய் 12 - 14 நிலவரத்தில் வாங்கி வந்தனர். தற்போது, 10 ரூபாய் நிலவரத்தில் விலையை குறைத்து கேட்பது விவசாயிகளின் அதிருப்திக்கு காரணமாகும். தென்னை நீண்டகாலப் பயிர், விலை சரிவு என்பதற்காக, உடனடியாக வேறு பயிருக்கு மாறி விட முடியாது. கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் கூட, 16 - 18 ரூபாய்க்கு குறையாமல் விற்கப்பட்ட தேங்காய், இந்தாண்டு கடும் விலைச்சரிவை சந்தித்துள்ளது.
விவசாயிகள் கூறியது (Farmers Comments)
கொரோனா காலத்தில் குறைந்த லாபத்தை, ஒரு சில மாதங்களில் பார்த்து விட வேண்டும் என்ற நோக்கில், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, தேங்காய் விலையை குறைத்துள்ளனர். இதற்கு மேலும், தேங்காய் விலை நிர்ணயத்தில் அரசு தலையிடாமல் இருந்தால், தென்னை விவசாயிகள் நிலை மிகுந்த கவலைக்கிடமாகி விடும்.
பொள்ளாச்சி பகுதி கடைகளில் எலுமிச்சை பழம் ஒன்று 12 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால், தேங்காய் கொள்முதல் விலை வெறும் 10 ரூபாய் என்றால், விவசாயிகளின் நிலையை அரசு நினைத்துப் பார்க்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த, அரசு கொள்முதல் நிலையங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில், பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், உடுமலை, செஞ்சேரிமலை, காங்கேயம் உள்ளிட்ட கொள்முதல் நிலையங்களில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் குறைந்தபட்ச ஆதார விலையான, 105.90 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், விவசாயிகள் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வருவதில்லை. விவசாயிகள் சிறிது சிரமம் எடுத்து, தேங்காயை தோண்டி காய வைத்து, கொப்பரையாக கொண்டு வந்து அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யத் துவங்கினால், வெளி மார்க்கெட்டில், தானாக விலை அதிகரிக்கும். அரசு திட்டங்களை விவசாயிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் கூறினார்.
மேலும் படிக்க