1. விவசாய தகவல்கள்

கீரை விவசாயம: குறைந்த நாட்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி?

R. Balakrishnan
R. Balakrishnan

விவசாயத்தில் மகசூல் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவத்தை நாம் இயற்கை உரங்களுக்கும் கொடுக்க வேண்டும். அப்போது தான் நாம் உருவாக்கும் உணவுப் பொருட்கள் நஞ்சில்லாமல், தரமானதாக கிடைக்கும். கீரை வகைகள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது. கீரையைப் பயிரிடும் விவசாயி, பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த, தற்போதைய காலகட்டத்தில் செயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார்கள். பூச்சிக் கொல்லி மருந்துகள் பூச்சித் தாக்குதலைத் தடுத்தாலும், கீரைகளின் மீது நஞ்சைக் கலந்து விடுகிறது.

அனைத்து காலங்களிலும் பயிரிடப்படும் கீரையானது, மனிதர்களுக்கு முக்கிய உணவாக அமைகிறது. ஆகவே, கீரைகளை சமைக்கும் முன் 10 நிமிடங்கள் உப்பு நீரில், நனைய வைத்து சமைப்பது சிறந்தது.

கீரை விவசாயம் (Spinach Farming)

பலவிதமான ஊட்டச் சத்துகளை அளிப்பதில் கீரை வகைகள் பங்கு வகிக்கிறது. தனிநபர் உணவில் நாள் ஒன்றுக்கு 100 கிராம் கீரையை கட்டாயம் சேர்க்க வேண்டியது அவசியம் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரைத்துள்ளது. நார்ச்சத்து, போலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், வைட்டமின் ஏ, கே, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துகள் கீரையில் உள்ளது.

குப்பைக்கீரை 'அமராந்தஸ்' வகையில் கோ 1, கோ 2, கோ 3 கிள்ளுக்கீரை, கோ 4 தானியக்கீரை, கோ 5 முளைக்கீரை, தண்டுக்கீரை, முளைக்கீரை, பி.எல்.ஆர் 1 போன்ற சிறுகீரைகளை சொல்லலாம். வடிகால் வசதி அதிகமுள்ள, மணற்பகுதிகளில், சிறிதளவு அமிலத்தன்மை கொண்ட மண் வகைகள் மற்றும் வெப்பமண்டலச் சூழலில் கீரைகள் நன்கு வளரும் திறன் பெற்றவை. வருடம் முழுவதும், அனைத்து காலங்களிலும் கீரைகளை பயிரிடலாம். கீரைகள் குறுகிய காலப் பயிர் என்பதால், விரைவிலேயே அறுவடை செய்து விடலாம். அதோடு, ஒரு முறைப் பயிரிட்டால், பல முறை மகசூல் எடுப்பது, கீரையின் தனிச்சிறப்பு.

நுணுக்கங்கள் (Techniques)

கடைசி உழவின் போது, ஹெக்டேருக்கு 25 டன் மட்கிய தொழு எரு, பாஸ்போபாக்டீரியா, தலா 2 கிலோ கிராம் அசோஸ்பைரில்லம் கலந்து இடவேண்டும். கிள்ளுக்கீரை, தானியக்கீரை, தண்டுக்கீரை மற்றும் முளைக்கீரைக்கு ஹெக்டேருக்கு 75 கிலோ மணிச்சத்து, தலா 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் தழைச் சத்து இட வேண்டும். சிறுகீரைக்கு 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 50 கிலோ தழைச்சத்து இட வேண்டும்.

கீரை விதைப்பதற்கு முன்பாக, நிலத்தை உழுதுவிட்டு, சிறு சிறு பாத்திகளை அமைக்க வேண்டியது அவசியம். தண்டுக்கீரை, தானியக்கீரை, முளைக்கீரை, கிள்ளுக்கீரை மற்றும் தானியக் கீரை வகைகளைப் பயிரிடுகையில், ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ விதைகளும், சிறு கீரைக்கு 3 கிலோ விதைகளும் தேவைப்படும். கீரை விதைகளுடன், 10 மடங்கு அளவிலான மணலைக் கலந்து விதைப்பது சிறந்தது.

நடவு செய்த 8 நாட்களுக்குப் பிறகு, சிறு கீரையில் 10 - 12 செ.மீ இடைவெளி விட்டு, கீரைச் செடிகளை கலைத்து விட்டால், மற்ற செடிகள் செழித்தும், தழைத்தும் வளரும்.

கீரைப் பயிரிடும் இந்த முறையை கடைபிடித்தால், குறைந்த நாட்களிலேயே கீரைச் செடிகள் வளர்ந்து, அதிக மகசூலை அள்ளித் தருவது நிச்சயம்.

மேலும் படிக்க

மண்ணின் வளத்திற்கு வண்ணத்துப்பூச்சிகளே சாட்சி!

பசுக்களைப் பாதுகாக்கிறது ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த முருங்கை கீரை!

English Summary: Spinach farming: How to get high yield in less days? Published on: 03 May 2022, 07:14 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.