தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாய உற்பத்திகளை தரம் உயர்த்துவது குறித்த, அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்க பிரதிகளின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
கடந்த புதன்கிழமை ”கள ஆய்வில் முதல்வர்” திட்டத்தின் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களின் தொழில்துறை, விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தின் சார்பில் பங்கேற்றவர்கள், மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கான தொடர்பு ஏற்படுத்த தேசிய அளவில் வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்புக் கூட்டம் நடத்திட உதவி செய்திட வேண்டும், முதல்நிலை சிறுதானியம் பதப்படுத்தும் மையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும். வேளாண்மை தொடர்பான செய்திக்களுக்காக “விவசாயிகள் பண்பலை” நிலையம் அமைத்திட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இதுகுறித்து விவாதிக்கும் வகையிலும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் நேற்று குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், விவசாய உற்பத்தி பொருட்களை தரம் உயர்த்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, மாநில விவசாய சங்க தலைவர் சின்னசாமி, வேளாண்மை இணை இயக்குநர் க.விஜயா, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் கார்த்திகைவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேலுசாமி உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது: மாவட்ட பொதுமக்களுக்கு, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள், பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது. இதை பயன்படுத்தி, மாவட்டத்தில் குறு, சிறு தொழில் செய்வோர் தங்களது தொழில் நிறுவனங்களை மேம்படுத்தி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தொழில் மேம்பாட்டில் உள்ள பிரச்னைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. விளைபொருட்களை, மதிப்பு கூட்டு பொருளாக தரம் உயர்த்தி விற்பனை செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.
இதற்காக அரசு வழங்கும் மானியம், பயிற்சி குறித்து, விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள வேளாண் அலுவலகங்களில் அறியலாம். தமிழகத்தில், சிறு தானிய உற்பத்தியில், தர்மபுரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, மாவட்ட விவசாயிகள் இதை பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி, விவசாய தொழிலாளர்களுக்கு, அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும் படிக்க:
ஓசூர் சிப்காட் பகுதியில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை திறந்து வைத்த முதல்வர்
100 நாள் வேலை உறுதித்திட்டம் பலிகடா-எம்பி ராகுல் காந்தி கண்டனம்