குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. டெல்லி உயர்நீதி மன்றத்தில் தடுப்பூசி தொடர்பாக ஒரு சிறுவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் எனப் பல மாதங்களாக தகவல்கள் வெளியாகி வருவதை தொடர்ந்து 12 முதல் 17 வயது உள்ள இளம்பருவத்தினர் தடுப்பூசி செலுத்துவதற்கு உடனே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று நீதிபதிகள் படேல் மற்றும் ஜோதி சிங் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அந்த நேரத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாட்டில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியின் பரிசோதனை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு மருத்துவ நிபுணர்களின் வழிக்காட்டுதலுடன் செலுத்தப்படும் என்று கூறினார்.
இது குறித்து நீதிபதிகள் உத்தரவிட்டதில் தடுப்பூசி பரிசோதனைகள் முடிய வேண்டும், முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்தினால் அது பேரழிவிற்கு வழிவகுக்கும். அதனால் பரிசோதனைகள் முடிந்த பிறகே செலுத்தப்பட வேண்டும்.
கொரோனா பரிசோதனைகள் முடிந்த உடனேயே தடுப்பூசிகள் விரைந்து செயல்படுத்தபடும். இதனை எதிர்பார்த்துதான் பெற்றோர்களும் காத்திருக்கின்றனர் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தனர்.
மேலும் படிக்க