விவசாயிகளுக்கு வேளாண் காப்பீடு திட்டம் (Crop Insurance) பயனளிக்காத நிலையில், திருவண்ணாமலையிலும், இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இனியாவது தனிநபர் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கிறது திருவண்ணாமலை மாவட்டம். இயற்கை பேரிடர், வெள்ளம், வறட்சி, நோய் பாதிப்பு, உற்பத்தி செலவு அதிகரிப்பு, மகசூல் இழப்பு, உரம் விலையேற்றம் என்று பல்வேறு நெருக்கடியில் விவசாயம் சிக்கித் திணறுகிறது. அதோடு, இரவு பகல் உழைத்து விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு சந்தையில் நியாயமான விலையும் கிடைப்பதில்லை.
விவசாயிகள் வேதனை!
வியர்வை சிந்தி, வாழ்நாள் சேமிப்பை விளைநிலத்தில் செலுத்தி, விளைச்சலுக்காக காத்திருக்கும் நேரத்தில், கனமழையோ, கடும் வறட்சியோ, நோய் தாக்குதலோ ஏற்பட்டு, விளைச்சலை முற்றிலுமாக வாரிச்சுருட்டி அழிக்கும்போது விவசாயிகள் கண்ணீரில் தவிக்கின்றனர். இப்படி, நெருக்கடியான நேரங்களில் விவசாயிகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது தான் பயிர் காப்பீடு திட்டம் (Crop Insurance Scheme). தேசிய வேளாண் காப்பீடு திட்டம் எனும் பெயரில் செயல்பட்டு, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டமென தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால், பயிர் காப்பீடு திட்டம் திருவண்ணாமலையில் விவசாயிகளுக்கு முழுமையான பயன் தரவில்லை என விவசாயிகள் வேதனை படுகின்றனர்.
நெல் (Paddy), மணிலா, கரும்பு, வாழை மற்றும் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வணிக தோட்டப்பயிர்கள் என அனைத்து விதமான உணவு பயிர்களுக்கும், மகசூல் இழப்பை (Yield Loss) மதிப்பிட்டு நிவாரணம் வழங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம். ஆனால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முறையாக இழப்பீடு தொகை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து உள்ளது.
பலன் இல்லா பயிர்க் காப்பீடு:
நடப்பு சம்பா பருவ சாகுபடிக்கு (Cultivation) நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.436 காப்பீட்டுத் தொகை செலுத்தினால், ஏக்கருக்கு ரூ.29,100 இழப்பீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, ஆயிரக்கணக்கான விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் காப்பீடு (Insurance) வசதி செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவ சாகுபடிக்கு காப்பீடு செய்ய கடந்த மாதம் 15ம் தேதியுடன் அவகாசம் முடிந்தது. நவரை பருவ சாகுபடி தற்போது காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வேளாண் காப்பீடு திட்டத்தில் இணைந்து, பிரிமியம் (Premium) தொகை செலுத்தியிருந்தாலும், விவசாயிகள் தனி நபர் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு தொகை பெற முடிவதில்லை.
கடும் வறட்சி, பெரு வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட வட்டாரம், உள்வட்டம் அல்லது வருவாய் கிராமம் என அரசால் தேர்வு செய்யப்படும் பகுதியில், ஒட்டுமொத்த சாகுபடி பரப்பில் 75 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே இழப்பீடு பெற முடியும் என்ற நிலை உள்ளது. வறட்சியால் பாதிக்கப்படும் தனியொரு விவசாயி, தன்னுடைய பயிர் பாதிப்பை தனித்தனியே மதிப்பிட்டு இழப்பீடு பெற முடிவதில்லை. அந்த வட்டாரத்துக்கு என மதிப்பிடப்படும் தொகையையே அந்த பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. அதோடு, கடந்த 7 ஆண்டுகளில், சராசரி மகசூல் (Yield) கணக்கிடப்பட்டு, அதில் நடப்பு பருவத்தில் ஏற்படும் மகசூல் இழப்பை அதிகாரிகள் கணக்கிடுகின்றனர். எனவே, இத்திட்டத்தில் அதிக அளவில் விவசாயிகளுக்கு பயன் கிடைப்பதில்லை.
கள ஆய்வில் தாமதம்:
பயிர் காப்பீடு திட்டத்தில் சேரும் விவசாயிகளிடம் இருந்து, ஒவ்வொரு பயிர் பருவத்திலும் பல கோடி ரூபாய் காப்பீடு பிரிமியம் தொகையாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த தொகைக்கு இணையான தொகை கூட விவசாயிகளுக்கு வந்து சேர்வதில்லை. இழப்பீடு குறித்த புகார்களை சம்மந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களும் (Insurance Company), வேளாண் அதிகாரிகளும் ஏற்பதில்லை. இழப்பீடு வழங்குவதற்கு உரிய பகுதியை தேர்ந்தெடுப்பதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வேளாண் சாகுபடி பாதிப்பு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட விவசாயி தனி நபராக இழப்பீடு பெறும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்தில் திருத்தம் (Correction) செய்தால் மட்டுமே, இந்த காப்பீடு திட்டம் முழுமையான பயன் தரக்கூடியதாக மாறும் என விவசாயிகள் எதிர்பாரக்கின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தை புரட்டிப் போட்ட நிவர் புயல் மற்றும் புரெவி புயலால், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரிய அளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மகசூல் கைக்கு வரும் நேரத்தில் பெய்த கனமழையால் நெல், வாழை, மணிலா போன்ற பயிரெல்லாம் பாழாகிவிட்டன. ஆனால், இதுவரை காப்பீடு தொடர்பான எந்த ஆய்வும் நடைபெறவில்லை. எந்தெந்த பகுதிகள் காப்பீடு திட்டத்தில் பயன்பெறும் என்ற தகவலும் வெளியாகவில்லை. வேளாண் அதிகாரிகள், காப்பீட்டு நிறுவனம் மற்றும் புள்ளியல் துறையினர் இதுவரை கள ஆய்வு நடத்தி, இழப்பீடுக்கு தகுதியுள்ள பகுதிகளை கண்டறியவில்லை.
பாதிப்பின் சுவடுகள் அழிந்த பிறகு, கள ஆய்வு நடத்தினால், அதன் உண்மைத்தன்மையை முழுமையாக அறிய வாய்ப்பில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, இனிவரும் காலங்களில் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு, நியாயமான இழப்பீடு கிடைக்கவும், தனியாக ஒரு விவசாயியின் விளை நிலையத்தில் ஏற்படும் பாதிப்பு, மகசூல் இழப்புக்கும் காப்பீடு திட்டத்தில் பயன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மழைநீரில் மூழ்கிய பயிர்களை காப்பாற்ற போராடும் விவசாயிகள்! வெள்ள நீரை வடிய வைக்கும் பணி தொடக்கம்!