வருகிற மே-10 க்குள் வங்காள விரிகுடாவில் இந்த ஆண்டின் முதல் புயல் உருவாக உள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிதாக உருவாகும் புயலுக்கு Mocha எனப்பெயர் வைக்கப்பட உள்ளது.
கடந்த ஒரு வாரக்காலமாக புயலுக்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று தென்கிழக்கு வங்கக் கடலில் வருகின்ற மே 6 ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்படுவதன் காரணமாக மே 7-ம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது, பின்னர் அது மே 8- ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
கடல்சார் சமூகம், குறிப்பாக மீனவர்கள், சிறிய கப்பல்கள், படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மே 7 ஆம் தேதி முதல் கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என IMD அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், தற்போதைய முன்னறிவிப்பு படி, புயல் எந்தப்பகுதியில் கரையை கடக்கும் என உறுதியாக கூறப்படவில்லை. வரும் நாட்களில் புயல் உருவாகும் பாதை, திசையினை பொறுத்தே அதனை உறுதியாக கூறமுடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMD-யின் கண்காணிப்பு படி, மே 7 ஆம் தேதி, அந்தமான் & நிக்கோபார் மற்றும் அதன் அண்டைப் பகுதியைச் சுற்றி கடுமையான வானிலை நிலவும். இப்பகுதியில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். மே 8 ஆம் தேதி, புயல் மத்திய வங்காள விரிகுடாவை நோக்கி நகரும், அங்கு அதன் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிமீ வரை அதிகரிக்கும். மேலும், மே 9 அன்று, அதன் வலிமை அதிகரித்தால் அதன் பாதை மாறலாம்.
"குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு புயலின் பாதை மற்றும் தீவிரம் பற்றிய விவரங்கள் வழங்கப்படும் எனவும், தற்போது அதன் பாதையினை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும்” இந்திய வானிலை ஆய்வுத் துறையின் வானிலை ஆய்வு இயக்குநர் ஜெனரல் டாக்டர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா குறிப்பிட்டுள்ளார்.
உருவாக உள்ள புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள ‘மோக்கா’ (mocha) என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. ஏமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரத்திற்கு மோக்கா என்ற பெயர் உள்ளது.
இந்தியாவில் பொதுவாக இரண்டு சூறாவளி பருவங்கள் உள்ளன - ஏப்ரல் முதல் ஜூன் மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை. இதில் ஒரு வருடத்தில் அதிகபட்ச சூறாவளி உருவாகும் மாதமாக மே மாதம் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
pic courtesy: care.org
மேலும் காண்க:
கடந்த 5 வருஷத்தில் நல்ல வளர்ச்சி- மனம் திறந்து பாராட்டிய பிரதமர்!