மோக்கா புயல் இன்று காலை வலுப்பெற்ற நிலையில் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புயலின் திசை என்ன?
நேற்று (10.05.2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (11.05.2023) காலை 05:30 மணி அளவில் "மோக்கா" புயலாக வலுப்பெற்று இன்று காலை 08:30 மணி அளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு- தென்மேற்கே நிலைகொண்டுள்ளது.
இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு நாளை (12.05.2023) காலை முதல் வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து (12.05.2023) மாலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
அதன் பிறகு 13.05.2023 மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வரை உயர்ந்து, 14.05.2023 காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும்.
தமிழகத்தில் மழைப்பொழியும் பகுதிகள்:
11.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
12.05.2023 முதல் 15.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
11.05.2023 முதல் 15.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். 14.05.2023 & 15.05.2023 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையினை பொறுத்த வரை ஆழ்கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/Chennai இணையதளத்தை காணவும்.
pic courtesy: IMD-RMC chennai
மேலும் காண்க:
TNAU: வேளாண் UG, Diploma படிப்புக்கு மாணவர் சேர்க்கை- முழு விவரம் காண்க