வங்க கடலில் உருவான நிவர் புயல் (Nivar cyclone) இன்று அதிகாலை கரையை கடந்தது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சூறை காற்றுடன் கன மழை பெய்ததால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கடலூரில் பாதிப்பு
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சி.மானம்பாடி, பொன்னந்திட்டு, சிங்கார குப்பம், கிள்ளை கலைஞர் நகர், பிச்சாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வீராணம் பாசனத்தை நம்பி பயிரிடப்பட்டுள்ள சுமார் 800 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தன.
இதேபோல், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடியும், சுமார் 500 ஏக்கரில் வாழை சாகுபடியும் செய்யப்பட்ட நிலையில் நிவர் புயல் காரணமாக சுமார் 50 ஏக்கர் பரப்பிலான பன்னீர் கரும்பு பயிர்களும் சுமார் 110 ஏக்கரிலான வாழை பயிர்களும் வேரோடு சாய்ந்து சேதமடைந்துள்ளது.
10 மாத கால பயிரான பன்னீர் கரும்பு சாகுபடி கடந்த மார்ச் மாதம் பயிரிடப்பட்ட நிலையில் வரும் தைப்பொங்கலுக்கு அறுவடை செய்யப்பட இருந்தது நிலையில் முற்றிலும் சேதமானது.
விழுப்புரத்தில் வாழைகள் சேதம்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பெய்த அதி கன மழை காரணமாக ஏராளமான இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின, மேலும் கண்டமங்கலம் அடுத்த சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்த பல ஏக்கர் வாழை மரங்கள் புயல் காரணமாக சேதம் அடைந்தன.
காஞ்சிபுரத்தில் நெற்பயிர்கள் சேதம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்தது. காஞ்சிபுரம் அடுத்த உள்ள வேளியூர், கோவிந்தவாடி அகரம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
ராணிப்பேட்டையில் பாதிப்பு
நிவர் புயல் எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடிய,விடிய பெய்த கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் வாழை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வருவாய் நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் பயிர்கள் சேதம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள விவசாயிகள் நெல் நடவு செய்து கதிர் முற்றி இன்னும் இருபது நாள்களில் அறுவடை செய்ய உள்ள நிலையில் நிவர் புயல் காரணமாக அதிக அளவில் காற்று வீசியதால் வயல் வெளியில் இருந்த நெற்பயிர்கள் காற்றில் சாய்ந்து சேதமடைந்துள்ளது
புயல் காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கு வேளாண் துறை மற்றும் தமிழக அரசு உரிய இழப்பிடு வழக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
உழவர் -அலுவலர் தொடர்புத் திட்டம் சேலத்தில் அறிமுகம்!!
மானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்!!
தமிழக அரசின் "உழவர் - அலுவலர் தொடர்புத் திட்டம்" - சிறப்பு அம்சங்கள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!