டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகரித்ததைத் தொடர்ந்து, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாமல், நெல் கொள்முதலுக்காக மூட்டைகளை அடிக்கி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
குறுவை சாகுபடி தொடக்கம்
டெல்டா மாவட்ட (Delta Districts) விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்றும் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு, குறுவை நெல் சாகுபடிக்காக (Paddy Cultivation), மேட்டூர் அணையிலிருந்து (Mettur Dam) ஜுன் 12ம் தேதியன்று பாசன நீர் திறந்துவிடப்பட்டது. விவசாயிகளும் நாற்றங்கால் மற்றும் நடவுப் பணிகளை முன்னதாகவே தொடங்கி, பாசன நீரை முழுமையாக பயன்படுத்தி நெல் நடவு மேற்கொள்ள வழிவகுத்தது.
3.87 லட்சம் ஏக்கர் சாகுபடி இலக்கு
அரசின் இத்தகைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளின் விளைவாக, தஞ்சை, நாகை, திருவாரூர், உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் 3.870 இலட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 30 ஆண்டு வரலாற்றில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட அதிகபட்ச பரப்பாகும்.
குறுவை சாகுபடி அதிகரிப்பு
விவசாயிகளின் அயராத உழைப்பால் குறுவை சாகுபடியும் (Kharif Cultivation) அதிகரித்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருப்பனந்தாள், ஆடுதுறை, கதிராமங்கலம், பந்தநல்லூர், திருக்கோடிக்காவல், கஞ்சனூர், குறிச்சிமலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை முடிந்த நிலையில், விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்க அரசின் நேரடி கொள்முதல்ல நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
நெல் மூட்டைகள் தேக்கம்
ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறிப்பிட்ட அளவு நெல் மூட்டைகள் மட்டுமே நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் முன்பு அடுக்கி வைத்து விற்பனைக்காக நாட்கணக்கில் காத்து இருக்கின்றனர். இதனிடையே மழை காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து பயனற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தனியார் நெல் கொள்முதல் நிலையங்களும் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை
இதனால், மிகுந்த கவலை கொண்டுள்ள விவசாயிகள் இந்த சூழ்நிலைகளை சமாளிக்க உடனடியாக கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க
வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!
RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு