கோடை நெல் உழவின்போது இலைப்பேன், குருத்துப்பூச்சி ஆகியவற்றால் மகசூல் இழப்பைத் தடுக்க உரிய பூச்சு மேலாண்மை முறைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் மகசூல் இழப்பை தடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
கோடை உழவு - பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு
இதுதொடர்பாக வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திப்பில், நடப்பு கோடை பருவத்தில் மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி, மதுரை மேற்கு, மேலூா், திருப்பரங்குன்றம், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூா் வட்டாரங்களில் 3 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 30 முதல் 60 நாள்கள் பயிராக உள்ளது. தற்போது நிலவும் தட்பவெப்பநிலையின் காரணமாக நெற் பயிரில் இலைப்பேன், குருத்துப் பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
பூச்சி மேலாண்மை முறைகளை பயன்படுத்த அறிவுரை
வறண்ட வெப்பநிலை காலங்களில் நெற்பயிரில் இலைப்பேன்கள் அதிகளவில் பெருகி இலையில் உள்ள சாற்றினை உறிஞ்சி, பச்சையம் சுரண்டப்படுவதால் இலையின் நுனி சுருண்டு காய்ந்து காணப்படும். அதேபோல, குருத்துப் பூச்சியின் புழுக்கள், இளம் பயிரின் தண்டில் துளையிட்டு உண்பதால் நடுக்குருத்து காய்ந்து, கதிா் பிடிக்கும் தருணத்தில், மணிகள் பால் பிடிக்காமல் சாவியாகி மகசூல் இழப்பு ஏற்படும்.
இலைப்பேன் மற்றும் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த வேளாண் துறையினரின் ஆலோசனையின்படி உரிய பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி மகசூல் இழப்பைத் தவிா்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க.....
ஐஸ்கிரீம் சுவை கொண்ட நீல நிற வாழைப்பழம் பற்றி தெரியுமா உங்களுக்கு?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!