நேரடி கொள்முதல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் பணிகள் முழுமையும் விரைவில் இயந்திரமயமாக்கப்படும் என கூட்டுறவு, உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொள்முதல் பணிகளை இயந்திரமயமாக்கும் திட்டம் நிறைவேறினால், கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்படும் உடல் அழுத்தத்தை குறைக்க இயலும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக்கோட்டையில், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகம் சார்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்த ராதாகிருஷ்ணன் இந்த மையத்தில் நாள் ஒன்றுக்கு 4,000 மெட்ரிக் டன் அளவிலான நெல் கொள்முதல் செய்வதற்கான இயந்திரங்கள் முழுமையாக பொருத்தப்படும் என தெரிவித்தார்.
மையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் சுமையை குறைக்கும் முயற்சிகளுக்கான முதற்கட்டமாக எடையிடுதல், பேக்கேஜிங்க் மற்றும் சேமிப்பு போன்ற முழு செயல்பாடும் இயந்திரமயமாக்கப்படும். இதன் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட குடிமைப் பொருள் கழகப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.
நெல் அரவையில் இருந்து இயந்திரங்கள் மூலம் தானாக நெல் மூடைகளை குடோனில் சேமிக்க திட்டமிட்டுள்ளோம்.இத்திட்டம் வெற்றி பெற்றால், மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், மேட்டூர் அணை கடந்த ஆண்டு மே 24 ஆம் தேதி திறக்கப்பட்டதில் இருந்து, இதுவரை 35.73 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 2.31 லட்சம் டன் நெல்லினை கூடுதலாக தமிழகம் கொள்முதல் செய்துள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக ராகியினை கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும், இதர சிறுதானியங்கள் கூட்டுறவுத் துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத் துறைக்கு சொந்தமான 140 கடைகளில் குறைந்த விலையில் நேரடியாக விற்பனை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பிள்ளையார்பட்டி குடோனில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக சேமிப்புக் கிடங்குகளை தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குநர் எஸ். பிரபாகரன், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் உணவுத்துறை செயலர் ஆய்வு செய்தார்.
முன்னதாக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், ''கர்நாடகாவில் இருந்து ராகி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரியில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி விநியோகம் மே மாதம் தொடங்கும்”எனவும் தெரிவித்திருந்தார்.
கூடுதலாக ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வீணாகமல் இருக்க அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை ஆகிய நான்கு பொருட்களையும் பாக்கெட்களில் வழங்க சிவில் சப்ளைஸ் துறை முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
சிலிண்டரின் விலை அதிரடியாக குறைப்பு- மாநில வாரியாக விலை என்ன?