தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் நேற்று நீலகிரி மாவட்டத்திலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு(ராகி) வழங்கும் திட்டத்தினை தமிழக அமைச்சர்கள் ஒன்றிணைந்து தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசின் சார்பில் தினை பயன்பாட்டினை உணவு பழக்கவழக்கங்களில் அதிகரிக்கும் வகையில் நியாய விலை கடையின் மூலம் கேழ்வரகு வழங்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் ராகி விநியோகம் செய்வதற்கான முன்னோடித் திட்டம் நேற்று தொடங்கி வைத்து, உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.ஆர்.பெரியகருப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் பாலகோலாவில் உள்ள ரேஷன் கடையில் தலா இரண்டு கிலோ ராகியை பயனாளிகளுக்கு வழங்கினர்.
“தினையில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, மேலும் இவை நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். நீலகிரி மாவட்டத்தில் முன்னோடியாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நுகர்வோர் விருப்பத்தைப் பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்” என்று அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரும் மொத்த அரிசி அளவில் இரண்டு கிலோவுக்கு மாற்றாக ராகியினை பெற்றுக்கொள்ளலாம். கோதுமை ஒதுக்கீடு ராகிக்கு மாற்றியமைக்கப்படும் என்பதால், உணவுத் துறைக்கு கூடுதல் செலவு ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூடுதல் தலைமைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் ராகியின் மாதாந்திர தேவை 400 மெட்ரிக் டன், இதன் மூலம் 2.29 லட்சம் கார்டுதாரர்கள் பயன்பெறுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது 482 மெட்ரிக் டன் உயர்தர ராகி கையிருப்பில் உள்ளது.
தருமபுரி மாவட்டத்திலும் முன்னோடி முயற்சி அறிமுகப்படுத்தப்படும். "இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) மூலம் இரு மாவட்டங்களுக்கும் மத்திய அரசு 1,350 மெட்ரிக் டன் ராகியை ஒதுக்கீடு செய்துள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
ஜனவரி மாதம், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகம் (TNCSC), பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிப்பதற்கான பொருட்களை வாங்குவதற்குப் பொறுப்பேற்று, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்களை (டிபிசி) நிறுவியது. இருப்பினும், 221 மெட்ரிக் டன் (MT) ராகி மட்டுமே பெறப்பட்டது, அதேசமயம் இரு மாவட்டங்களுக்கும் மாதாந்திரத் தேவை 1,360 மெட்ரிக் டன் ஆகும். இதையடுத்து, கர்நாடகாவில் இருந்து எப்சிஐ மூலம் உணவுத் துறை ராகியை கொள்முதல் செய்தது.
வேளாண் துறையின் தரவுகளின்படி, தமிழ்நாடு 2018-19 ஆம் ஆண்டில் 2.56 லட்சம் மெட்ரிக் டன், 2019-20-ல் 2.74 லட்சம் மெட்ரிக் டன், 2021-22-ல் 2.89 லட்சம் மெட்ரிக் டன் ராகியை உற்பத்தி செய்துள்ளது.
ராகி விளையும் முக்கிய மாவட்டங்கள் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர். ராகிக்கான கொள்முதல் விலை ரூ.35.78 ஆக குறைந்ததே விவசாயிகள் மத்தியில் கேழ்வரகினை பயிரிட விருப்பம் இல்லாததற்கு முதன்மைக் காரணம் என விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
pic courtesy: sakkarapani TN minister FB
மேலும் காண்க:
உழவன் செயலியில் புதிய அப்டேட்- கூலி வேலையாட்கள் பிரச்சினைக்கு தீர்வு!