இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் சமையல் கேஸ் சிலிண்டர்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு 2016ல் 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2020ஆம் ஆண்டுக்குள் 80 மில்லியன் பயனர்களை சேர்க்க திட்டம். 8 கோடி பயனர்கள் இத்திட்டத்தில் இணைந்ததை அடுத்து மத்திய அரசும் இந்த ஆண்டு உஜ்வாலா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த உஜ்வாலா 2.0 திட்டத்தில், ஒரு கோடி பேருக்கு, சிலிண்டருடன், அடுப்பு வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் வாங்க, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த பெண் ஏற்கனவே சமையல் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். சிலிண்டர் இணைப்பு பெண்ணின் பெயரில் வழங்கப்படும். விண்ணப்பதாரர் வேறு எந்த சமையல் சிலிண்டர் திட்டத்திலும் பயனாளியாக இருக்கக்கூடாது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் செப்டம்பர் 2019 வரை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான IOCL, HPCL & BPCL மூலம் இந்தியா முழுவதும் 8 கோடியே 03 லட்சத்து 39 ஆயிரத்து 993 இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 32 லட்சத்து 43 ஆயிரத்து 190 இலவச உஜ்வாலா இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதே சமயம் சமையல் எரிவாயு விலை உயர்வால் நாடு முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 2021ல் சிலிண்டரின் விலை ரூ.825 ஆக இருந்தது.ஜூலையில் ரூ.850 ஆக இருந்த சிலிண்டர் விலை ஆகஸ்ட் மாதம் ரூ.875 ஆக உயர்ந்து இப்போது மே மாதத்தில் ரூ.1018.50க்கு விற்கப்படுகிறது.
2020 இல் கொரோனா பிரச்சினை வந்தபோது, அரசாங்கத்தின் வரி வருவாய் குறைந்து, செலவுகள் அதிகரித்ததால், மானியப் பலன்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதையடுத்து மீண்டும் மானியம் வழங்கப்பட்டது. ஆனால், 95 சதவீத மக்களுக்கு மானியம் சென்றடையவில்லை என்றும், மானியம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
மானியம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில், தற்போது திடீரென ஒரு முக்கிய அறிவிப்பை பொதுமக்களுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு ரூ.200 வரை மானியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வரும் சூழலில் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளார்களா என்ற கேள்விக்கு, நிச்சயம் நிவாரணம் இல்லை என்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த இல்லத்தரசிகள் இந்திராணி, சத்யா ஆகியோர் மானியம் எங்களுக்கு பயனளிக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. மானியத்திற்குப் பதிலாக விலையைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
இது குறித்த அவர்கள் நம்மிடம் கூறுகையில், , "2 ஆண்டு காலம் வங்கி கணக்கில் மானியத்தை செலுத்தாதவர்கள் தற்போது செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. உஜ்வாலா திட்டத்தில் 12 கேஸ் சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரூ.200 மானியம் வழங்கப்படும் என தெரிவித்தது. ஆனால் ஒருவர் வங்கி கணக்கில் கூட அது முற்றிலும் வந்து சேரவில்லை.
தற்போது வருவதற்கு கூடிய மானியம் என்பது வந்து சேருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மானியம் 200 ரூபாய் குறைப்பதற்கு பதிலாக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டால் நன்மையாக இருக்கும்" என்கின்றனர்.
உஜ்வாலா திட்டம் என்பது இல்லத்தரசிகளின் கஷ்டத்தைப் போக்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும்.
இதில், அதிக பயனர்கள் சேர்க்கப்பட்டாலும், பயனர்கள் ஒரு முறை மட்டுமே பயனடைவார்கள். 90% பேர் அடுத்த முறை சிலிண்டர் வாங்காததற்குக் காரணம் வங்கிக் கணக்கில் மானியம் சரியாக வராததுதான் என்கிறார்கள். இன்னும் அதே குழப்பம் மக்களிடையே நிலவி வரும் நிலையில், மானியம் கொடுப்பதை விட சிலிண்டர் விலையை குறைத்தால் நல்லது என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது.
மேலும் படிக்க:
LPG Subsidy: மக்களின் கணக்கில் ரூ.237 சிலிண்டர் மானியம் டெபாசிட்!
இனி இவர்களுக்கு சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்- விபரம் உள்ளே!