கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது, என சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக நாடுகளில் கொடூர அரக்கன் என வருணிக்கப்படும் கொரோனா வைரஸின் அடுத்த அலைத் தீவிரமாகப் பரவி வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தமட்டில், கொலைகாரக் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களாகப் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சை பிரிவை, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாக்கிருஷ்ணன் கூறியதாவது:-
உயருகிறது
மஹாராஷ்டிரா, டில்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், 'ஒமைக்ரான்' பரவல் இருக்கிறது. ஏப்., 15ல் தமிழகத்தைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 22 என்ற எண்ணிக்கையில் பதிவாகி இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது, 40, 50 என்ற எண்ணிக்கையில் உயர்ந்து வருகிறது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
கூடாது கவனக்குறைவு
மூன்று அலைகளை வென்று விட்டு, கடைசியில் கரை ஒதுங்கும் நேரத்தில் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது. கொரோனா பரவலை முழுமையாக ஒழிக்கும் நேரத்தில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் கல்லுாரி மாணவர்கள் மூலம் பரவுவதை தடுப்பது சவாலாக உள்ளது.
பல மாதங்களாக பாதிப்பு 100க்கும் குறைவு என்ற நிலையில் கட்டுக்குள் உள்ளது. மார்ச் 17க்கு பின், ஒரு இறப்பு கூட இல்லை.
ஆட்சியர்களுக்கு உத்தரவு
தென் ஆப்பிரிக்காவில் அதிகம் பரவி வரும் 'பிஏ4' வைரஸ் பாதிப்பு ஒரு மாணவிக்கு இருந்து, முழுமையாக குணமாகி விட்டது. தற்போது மஹாராஷ்டிராவில் ஏழு பேருக்கு 'பிஏ4, பிஏ 53' பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்க, பொது இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயப்படுத்த அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை
ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் பற்றிய அறிவுறுத்தல், மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு பயணத்தில் இருந்து வந்தவர்கள், 21 நாட்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழகம் உட்பட இந்தியாவில், இந்த நோய் பாதிப்பு பதிவாகவில்லை. உலக அளவில் குரங்கு அம்மை பாதிப்பால் இறப்பு எதுவும் நிகழவில்லை.கொரோனா காலத்தில், உலக அளவில் மனரீதியான பாதிப்பு இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!