மதுரை மாவட்டம், கே.புதுார் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் முருங்கை சாகுபடியை (Drumstick Cultivation) அதிகரிக்கும் நோக்கத்தில் ஏற்றுமதி மண்டலத்திற்கான கட்டமைப்பு தயாராகி வருகிறது.
இம்மாவட்டத்தை மையப்படுத்தி சுற்றியுள்ள ஆறு மாவட்டங்களை ஒருங்கிணைத்து முருங்கை ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. அதன்படி மதுரை, பெரியகுளத்தில் முருங்கை ஏற்றுமதி தொடர்பான கருத்தரங்குகள் நடந்தன. சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டது.
கட்டுமானப் பணிகள்
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கான கான்பரன்சிங் வசதி, முருங்கை இலையை உலர்த்தும் யூனிட், பேக்கிங் மற்றும் பதப்படுத்தும் யூனிட்கள் இதில் அமைகின்றன. வேளாண் வணிக துணை இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது: ஆறு மாவட்ட விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் இந்த மண்டலத்தை பயன்படுத்தலாம்.
மதுரையில் தேசிய அளவிலான ஆய்வகம் அமைய ஏற்பாடு செய்யப்படும் என மாநில வேளாண்மை விற்பனை வாரிய ஆணையர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.
முருங்கை சாகுபடி
மதுரையில் செல்லம்பட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டியில் மட்டும் 700 எக்டேரில் முருங்கை சாகுபடி (Drumstick Cultivation) செய்யப்படுகிறது. பி.கே.எம். 1 ரக செடி முருங்கை வறட்சியை தாங்கி நன்கு வளரும். குறைந்த காலத்திலேயே இலை அறுவடை செய்யலாம். அனைத்து வட்டாரங்களிலும் சாகுபடியை அதிகரிக்க தோட்டக்கலை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சாகுபடியை அதிகரிக்க இடுபொருள் மானியம் தரவேண்டும். எல்லா நேரத்திலும் விலை சரியான அளவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
மேலும் படிக்க
கொள்முதல் நிலையங்களில் ஏக்கருக்கு 30 நெல் மூட்டைகள் மட்டுமே வாங்கப்படுவதால் விவசாயிகள் தவிப்பு!