விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
விவசாயிகளுக்கு முக்கியத்துவம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தஞ்சை மாவட்டம் வேளாண்மை சார்ந்த மாவட்டமாக இருப்பதால் விவசாயிகளின் நலனுக்கும், அவர்களது முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் பிரச்சினையை விவசாயிகள் சந்திப்பதாக பல தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தீர்வு காணப்படும்.
மானாவாரி பயிர்கள் சாகுபடி
விவசாயிகள் நெல்லை (Paddy), நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டு காத்திருக்காத வகையில், உடனடியாக கொள்முதல் (Purchase) செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பருவத்தில் 9 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் முப்போகமும், ஒரு சில இடங்களில் 2 போகமும், சில பகுதிகளில் ஒரு போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. உளுந்து, எள், கடலை போன்ற மானாவாரி பயிர்கள் சாகுபடி (Cultivation) குறைந்து வருவதை அதிகப்படுத்தும் வகையில் ஒரு போகம், 2 போகம் சாகுபடி நடைபெறும் இடங்களில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மானாவாரி பயிர்கள் சாகுபடியால் மண்வளம் பெருகும். விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் வகையில் வேளாண்மை துறை மேம்படுத்தப்படும். உரம் போன்ற இடுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைமடை வரை தட்டுப்பாடின்றி தண்ணீர் செல்வது குறித்து ஆய்வு செய்யப்படும். கிளை வாய்க்கால்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு நிலுவை தொகை தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஏரி, குளங்களில் மண் அள்ளும் போது உயிர்பலி ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், பள்ளமாக இல்லாமல் சமச்சீராக மண் எடுக்க அறிவுறுத்தப்படும். மேலும், மணல் கொள்ளை தடுக்கப்படும் என்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கூறினார்.
மேலும் படிக்க
ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறி, பழங்கள் வீடுகளுக்கு சென்று நேரடி விற்பனை!