விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை உட்பட அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிக்களுக்கு வளைந்து கொடுக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசினை எதிர்த்து தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கூட்டாக ஏப்ரல் 5 ஆம் தேதி டெல்லியில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
சிஐடியு, அகில இந்திய கிசான் சபா மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி டெல்லி நோக்கி 'மஸ்தூர் கிசான் சங்கர்ஷ் பேரணி' நடத்த திட்டமிட்டுள்ளது. 2018 செப்டம்பர் 5 ஆம் தேதி நடைப்பெற்ற வரலாற்று கண்டன பேரணியை போன்று இதிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், விவசாய மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த கண்டன பேரணியானது 13 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கியதுடன், ஒன்றிய அரசுக்கு எதிராகவும் நடத்தப்பட உள்ளது. கோரிக்கைகளின் விவரம் பின்வருமாறு- ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தம் செய்தல், குறைந்தப்பட்ச ஊதியத்தை மாதம் ரூ.26,000 ஆக நிர்ணயித்தல், அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியமாக 10,000 ரூபாய் வழங்குதல், இந்திய இராணுவ வீரர்களின் தேர்வுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்தல் , சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் பயிர்களுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலையினை உறுதி செய்தல், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கடனை தள்ளுபடி செய்தல் மற்றும் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா , மின்சாரத் திருத்த சட்ட மசோதா 2022 ஆகியவற்றை கைவிடக்கோரியும் பேரணி நடைப்பெற உள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி நாட்களை 200 நாட்களாக விரிவுப்படுத்தவும், ஊரக பணியாளர்களின் குறைந்தப்பட்ச ஊதியத்தை ரூ.600 ஆக நிர்ணயிக்க கோரியும், நகர்ப்புற வேலைவாய்ப்பினை உறுதி செய்யவும், பொதுத்துறை மற்றும் பொதுத்துறை சேவைகளை தனியார் மயமாக்கும் செயலை கண்டித்தும், விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்தக்கோரியும், எரிபொருள் மீதான மத்திய கலால் வரியை குறைக்கக்கோரியும் இது தவிர்த்து பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரியை அறிமுகப்படுத்தவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை அதிகாரிக்க கோரியும் பேரணி நடைபெற உள்ளது.
பேரணி குறித்து சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென், கிசான் சபாவின் விஜூ கிருஷ்ணன், AIAWU அமைப்பின் பி.வெங்கட் வெளியிட்டுள்ள தகவலின்படி, தொழிலாளர்களையும்- விவசாயிகளையும் சுரண்டி சூறையாடும் அதானி, அம்பானி போன்ற கூட்டாளிகளுக்கு ஏற்றவாறு மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. அதே வேளையில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் அதனை தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உணர்வற்று போயுள்ளது மோடி தலைமையிலான அரசு. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைப்பெற்ற வரலாற்று போராட்டத்தின் போது அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் மெத்தனமாக உள்ளது.
அனைத்து ஜனநாயக நிறுவனங்களும் சிதைக்கப்படுகின்றன, ஜனநாயக உரிமைகள் குறைக்கப்படுகின்றன. ஆளும் ஆட்சிக்கு எதிரான அனைத்து எதிர்ப்புக் குரல்களும் UAPA போன்ற கொடூரமான சட்டங்களால் நசுக்கப்படுகின்றன.உண்மையான பிரச்சினைகளில் மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்துவதற்காக ஆளும் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சியால் வகுப்புவாத விஷம் பரப்பப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 5 ஆம் தேதி நடைப்பெற உள்ள கூட்டுப் பிரச்சாரமும், அணிதிரட்டலும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கூட்டுப் போராட்டங்களை மேலும் ஒருங்கிணைத்து முன்னேற்றும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாநாட்டில் கூட்டுப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
நெசவாளர்களின் துயர் துடைக்க வீதிகளில் கைத்தறி ஆடைகளை விற்றவர் அண்ணா- முதல்வர் நெகிழ்ச்சி
பிஎம் கிசான்- உங்களது விவரங்களை ஆன்லைனில் திருத்த 6 STEPS போதுமா?