பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள குளங்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல் மண்/களிமண் வெட்டி எடுப்பதற்கு வருவாய் வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வண்டல் மண்ணில் (Alluvial soil) நெல், கோதுமை, கரும்பு போன்ற பயிர்கள் செழித்து வளரும். வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாக திகழும் வண்டல் மண்ணில் தழைச்சத்து, நார்ச்சத்து, கனிம மூலக்கூறுகளும் நிறைந்துள்ளன. இந்நிலையில் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பது தொடர்பான விவரங்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள குளங்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல் மண்/ களிமண் வெட்டி எடுப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு தென்காசி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண் 04, நாள். 25.03.2023-ன் படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தென்காசி மாவட்டத்தில் மேல்வைப்பாறு வடிநில கோட்டம், இராஜபாளையம் கட்டுப்பாட்டுல் உள்ள தகுதிவாய்ந்த 04 குளங்கள் கண்டறியப்பட்டு தென்காசி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண் 05 நாள் : 31.08.2023-ன்படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் எவ்வளவு மண் எடுக்கலாம்?
விவசாய பயன்பாட்டிற்காக நஞ்சை நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கனமீட்டர் அளவும் மற்றும் புஞ்சை நிலங்களை மேம்படுத்துவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 90 கனமீட்டர் அளவும் வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதைப்போல் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக 60 கனமீட்டர் அளவும் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு 30 கனமீட்டர் அளவும் கட்டணமில்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இச்சலுகையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாயம் நிலம் தொடர்பான பட்டா, 10 (1) சிட்டா அடங்கல், கிரைய பத்திரம் மற்றும் புலப்படநகல் ஆகியவற்றுடனும், மேலும் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்றுகளுடனும், சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்களிடம் உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
வண்டல் மண்ணில் பொட்டாசியம் பாஸ்போரிக் அமிலம், சுண்ணாம்பு மற்றும் கார்பன் கலவைகள் அதிகமாக காணப்படுவதாலும், நைட்ரஜன் குறைவாக உள்ளதாலும் இயற்கை முறையில் மண்ணின் தன்மையினை மேம்படுத்த நல்ல தேர்வாக திகழ்கிறது. மேலும் களிமண் பாங்கான வண்டல் படிவுகள் மண்பாண்ட தொழில்களில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
குடும்பத்தலைவிக்கான ரூ.1000- கடைசி நேரத்தில் முதல்வர் போட்ட கண்டிஷன்!
ஒரு முட்டையின் விலை 65 ஆக உயர்வு- நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கு அதிர்ஷ்டம்