1. செய்திகள்

குடும்பத்தலைவிக்கான ரூ.1000- முதல்வர் போட்ட கண்டிஷன்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
1000 rupees Kalaignar magalir urimai scheme new update

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செப்.15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், அதுக்குறித்து ஆய்வில் ஈடுபட்டார். அப்போது திட்டம் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்,

திமுகவின் தேர்தல் அறிக்கையில் முதன்மையான வாக்குறுதியாக கருதப்பட்ட குடும்பத் தலைவிக்கான ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இத்திட்டம் செப்.15 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இதுத்தொடர்பாக இன்று ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் அரசு அலுவலர்களுக்கு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது முதல்வர் குறிப்பிட்ட முக்கிய விவரங்கள் பின்வருமாறு-

தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரும் செப்.15 முதல் கிடைக்கும் நிலையில் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்.

ஏ.டி.எம். கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏடி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது, அதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதே போல், வரும் 15 -ஆம் தேதி, என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll Free எண்ணும் சேர்க்கப்பட வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

மொத்தம் எத்தனை பேர் தகுதி:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மொத்தம் எத்தனை பேர் பயன்பெறுவார்கள் என்கிற தகவலையும் இக்கூட்டத்தில் முதல்வர் தெரிவித்தார். அவற்றின் விவரம்:

” இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும்.

அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள்.சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம். மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். வருகிற 15 ஆம் நாள் அன்று மாவட்டத் தலைநகரங்களில் இதற்கான விழா நடக்க இருக்கிறது.”

”பணம் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக வருவார்கள். பணம் கிடைக்காத மகளிர் யாராவது அந்த இடத்துக்கு வந்து கேட்டால், பதில் சொல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தனியாக இதற்கென அலுவலர்களை உட்கார வைத்து, இப்படி கேட்க வரும் மகளிரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, நாங்கள் பரிசீலிக்கிறோம். என்பதைச் சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால், ஏதாவது ஒரு இடத்தில் பிரச்சினை என்றாலும், அது மாநிலம் முழுவதும் பெரிய செய்தியாக மாறிவிடும். அதனால் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய முதல்வர், ”மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும், இந்த திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கும் வங்கிகளுக்கும் - வங்கிகளுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பு சீராக அமைந்து வருகிறதா என்பதை மாதம் தோறும் கண்காணிக்க வேண்டும். மாதத்தில் முதல் ஒருவார காலம் இந்த திட்டத்துக்காக தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனவும் தனது உரையில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் நா. முருகானந்தம், இஆ.ப. செயலாளர் உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண்க:

ஆதார் அப்டேட் - UIDAI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Rain Update: இந்த 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

English Summary: 1000 rupees Kalaignar magalir urimai scheme new update Published on: 11 September 2023, 06:21 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.