கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மைத்துறை சார்பாக, வேளாண்மை உற்பத்தி மற்றும் குறை தீர்க்கும் குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., தலைமையில், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் முன்னிலையில் நேற்று நடைப்பெற்றது. இதில் விவசாயிகள் தரப்பில் டிராக்டர், மின் மோட்டார், இலவச மின்சாரம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனைத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, மீன் வளர்ப்புத்துறை,நீர்வளத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய துறைகளுக்கான வேளாண்மை உற்பத்தி மற்றும் குறை தீர்க்கும் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
விவசாயிகள் வைத்த கோரிக்கை: வேப்பம் புண்ணாக்கு உரத்தை வேளாண்மை மற்றும் கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கவும், தற்போது வேளாண்மை பொறியியல் துறையில் இ வாடகை திட்டத்தின் கீழ் 7 டிராக்டர்கள் உள்ள நிலையில் வட்டாரத்திற்கு 1 டிராக்டர் வீதம் 10 டிராக்டர் வழங்க பரிசீலனை செய்யவும், சொட்டுநீர்ப் பாசன திட்டத்தில் பயன்படுத்திய விவசாயிகள் 4 வருடங்களான பழைய மின் மோட்டார்களுக்கு பதிலாக புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டத்தில் சொட்டுநீர் திட்டத்தை பயன்படுத்தாத விவசாயிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தவும், நாட்டு மாடு இனங்களின் விந்தணு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
பூந்தோட்ட மின் இணைப்பு: இவற்றோடு பூந்தோட்ட மின் இணைப்பை நிறைய விவசாயிகள் பயன்படுத்துவதால், பூந்தோட்ட மின் இணைப்பை இலவச மின்சாரத்தோடு இணைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.பச்சையப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கு.சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம், ஆகியோர் பங்கேற்றனர்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விற்பனைக்குழு செயலாளர் மு.ரவி, பையூர் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் டாக்டர் அனிசா ராணி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் ஏ.மரியசுந்தர், வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) க.காளிமுத்து, தோட்டக்கலை துணை இயக்குநர் கொ.செந்தில்குமார், உட்பட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலர் பங்கேற்றனர்.
இதையும் காண்க:
சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்- மாநிலம் வாரியாக எவ்வளவு விலை?
Gold Rate: ரொம்ப நாளுக்குப் பிறகு சரிய தொடங்கிய தங்கம் விலை!