மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். விவசாயிகள் தங்களின் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் , உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் 27ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று டிராக்டர் பேரணி
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை துவங்கி 7-வது மாதம் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் சார்பில் இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதாக விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார். இதற்கான ஒத்திகைகள் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது, மேலும் உத்தரப்பிரதேச விவசாயிகள் உள்பட ஏராளமான விவசாயிகள் டெல்லி காசியாபாத் பகுதியில் குவிந்து வருகின்றனர்
போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்
இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நாட்டில் பெரும்பான்மை பிரிவினர் இந்த சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனினும், இந்த சட்டங்களில் ஏதேனும் ஷரத்துக்கள் ஆட்சேபத்துக்குரிய வகையில் இருந்தால் மத்திய அரசு அதற்கு தீர்வு காண தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!
மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்- அரசு நடவடிக்கை எடுக்குமா?