தமிழக பாரம்பரிய ஒற்றை நாற்று நடவு முறை மூலம் ஈரோடு மாவட்ட விவசாயிகள் அதிக மகசூல் பெற்று வருகின்றனர். வெளிமாவட்ட மக்களும், அக்கம் பக்கத்து ஊர்காரர்களும் இந்த முறையை கற்று நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒற்றை நாற்று நெல் நடவு முறை
ஈரோடு மாவட்டம், கீழ்பவானி பாசனப் பகுதிக்குட்பட்ட செண்பகப்புதூர் கிராம விவாயிகள், ஆத்தூரு கிச்சிலி சம்பா, சொர்ணா மசூரி ஆகிய மரபு ரக நெல் ரகங்களை, ஒற்றை நாற்று முறையில் நட்டு வருகின்றனர். பொதுவாக நெல் நடவில் குத்துக்குத்தாக நாற்று நடவு செய்வது வழக்கம். அப்படி ஒரு ஏக்கர் நடவு செய்ய 30 கிலோ விதை நெல் தேவைப்படும். ஆனால், இந்த ஒற்றை நெல் நாற்று நடவு முறையில் 3 கிலோ விதை நெல் போதுமானது. குத்து நாத்து நடவு முறையில் தாய் பயிருக்கு அதிகளவில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒற்றை நாற்று நடவு முறையில் 80 சதவீதம் தண்ணீர் பாய்ச்சல் மிச்சப்படும்.
இயற்கை உரங்களே போதுமானது
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், உழவு செய்த நிலத்தில், 13 நாட்களில் நாற்று எடுத்து நடவு செய்ய தொடங்கிவிடலாம். ரசாயன உரம், மருந்துகள் போன்றவற்றை தவிர்த்து, இயற்கை உரம், பூச்சி மருந்துகளையும், பூச்சி விரட்டிகளாக வேம்பு, ஆடாதொடை, எருக்கு, ஆமணக்கு ஆகியவற்றை அரைத்துக் கரைசல் செய்து தெளித்துவிடுவதாக தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் ஆர்வம்
சாதாரண நெல் ரகம் கிலோ 30 ரூபாய் வரையும், கிச்சிலி சம்பா, சொர்ணா மசூரி ஆகியவை கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த பகுதிகளில் உள்ளூர் விவசாயிகள் மட்டுமல்ல, வெளியூர், வெளிமாவட்ட விவசாயிகளும் வந்து அங்கு நடக்கும் நெல்நாற்று நடவைப் பார்வையிட்டு, சந்தேகங்கள் கேட்டுச் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்
விதை, நடவு, தண்ணீர், உரம், மருந்து, வேலை எல்லாமே 30-லிருந்து 80 சதவீதம் வரை பணிகளையும், செலவினங்களையும் மிச்சப்படுத்திக் கொடுப்பதோடு, நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள் இந்த ஒற்றை நாற்று நடவுமுறையில் ஆர்வம் செலுத்துகிறார்கள். கீழ்பவானி பாசன விவசாயிகளில் பலர் இந்த முறைக்கு மாறிவருகிறார்கள்.
மானியம் நிறுத்தம்
2002-2008ம் ஆண்டுகளில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்த ஒற்றை நாற்று நடவு முறையை ஆய்வுக்கு எடுத்தது. இது வெற்றிகரமான முறை என கண்டறிந்து விவசாயிகள் இதைப் பின்பற்ற வேண்டும் என்றும், பல்வேறு விழிப்புணர்வுகளும், ஆலோசனைகளும் மானியமும் வழங்கியது. இப்போது இந்நடவு முறை பரவலாகிவிட்டதால் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!
பண்டிகைகள் வருது... சந்தைகளை திறங்க...! - கால்நடை வியாபாரிகள் கோரிக்கை!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் தொடங்கி வைத்தார் - எடப்பாடி பழனிசாமி!