தமிழகத்தில் பல இடங்களில் பருவம் தவறிய மழையால், வயலிலேயே பயிர்கள் சேதமடைந்தன. இருந்த போதிலும் முடிந்த அளவு நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்தனர். ஆனால் ஈரப்பதம் (Moisture) அதிகமாக இருந்ததால், நெற்கதிர்களை காய வைக்க கயிற்று கட்டிலைப் பயன்படுத்தி வருகின்றனர். இளையான்குடி பகுதியில் தொடர் மழையால் நனைந்த அறுவடை (Harvest) செய்த நெற்கதிர்களை கட்டிலில் போட்டு விவசாயிகள் காய வைக்கின்றனர். அதோடு பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் (Relief Fund) வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மீண்டும் முளைத்த பயிர்கள்:
சிவகங்கை மாவட்டத்தில் பருவமழையை நம்பி பல்வேறு இடங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் வரை விவசாயிகள் நெல் (Paddy) பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீரில் நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்ததால் மீண்டும் அவை முளைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து வயல்களில் உள்ள தண்ணீர் வடியாததால் எஞ்சியுள்ள நெல்பயிர்களை காப்பாற்றுவதற்காக தேங்கிய தண்ணீரில் நின்று விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கையை அடுத்த சுந்தரநடப்பு, கல்லல் அருகே உள்ள தேவப்பபட்டு, சாக்கோட்டை அருகே உள்ள நெம்மேனி உள்ளிட்ட பகுதிகள், இளையான்குடி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தமங்களம், கண்ணமங்களம், முள்ளியரேந்தல், வலசைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர் கடும் சேதத்தை சந்தித்தன.
அறுவடை எந்திரத்துக்கு மறுப்பு
இளையான்குடி பகுதியில் கோடைக்காலங்களில் குடிதண்ணீருக்கு கூட கடுமையான தட்டுப்பாடு இருந்த நிலையில் விவசாயம் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு இறுதியில் பெய்த பருவமழை காரணமாக எப்படியும் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகளாகிய நாங்கள் நெல் பயிரிட்டோம். பின்னர் பெய்த தொடர் மழையால் வயல்களில் மழைநீர் (Rainwater) தேங்கி பயிர்கள் சேதமாகி விட்டன. மிளகாய் செடிகளை தண்ணீர் தேங்கியதால் அவை அழுகி விட்டன. வயல் சேறும், சகதியுமாக இருப்பதால் அறுவடை எந்திரம் (Harvest Machine) வைத்து இருப்பவர்கள் கூட நெல்அறுவடை பணிக்கு வர மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் வயலுக்கு சென்று தேங்கிய மழைநீரை வடிக்கட்டும் பணியில் ஈடுபட்டனர். ஒரு சில விவசாயிகள் கதிர்அரிவாளால் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை நார் கட்டிலில் போட்டு அதில் தேங்கி இருக்கும் மழைநீரை வடிக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கூடுதல் சம்பளம் கேட்கிறார்கள்
வயலில் மழைநீர் தேங்கி இருப்பதால் அறுவடை எந்திரம் வைப்பவர்கள் வர மறுப்பதால் விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். அந்த கூலி ஆட்களும் நெல் அறுவடை பணிக்கு கூடுதல் சம்பளம் கேட்பதால் விவசாயிகளாகிய நாங்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகி உள்ளோம். எனவே அரசு மழையால் சேதமடைந்த நெற்பயிரை உடனே கணக்கெடுத்து விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
மரச்செக்கு எண்ணெய்த் தயாரிப்பில் அசத்தல் லாபம் பெரும் விவசாயி செல்வம்!