புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வரும் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26ம் தேதி) டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 50 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து வருகின்றன. எனவே தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
டிராக்டர் பேரணி
இதன் ஒரு பகுதியாக வருகிற குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்த பேரணியால் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் மற்றும் ராணுவ அணிவகுப்பு போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படும் எனக்கூறி, இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சீந்திமன்றம், இந்த பிரச்சனை சட்டம்-ஒழுங்கு விவகாரம் எனவும், இது குறித்து முடிவெடுக்க டெல்லி போலீசாருக்கே முதல் அதிகாரம் இருப்பதாகவும் கூறி வழக்கை ஒத்திவைத்தது.
இதுகுறித்து, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பேசியதாவது, நாங்கள் இந்த டிராக்டர் பேரணியை சட்டம்-ஒழுங்குக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் அமைதியாக நடத்துவோம். அமைதியான பேரணி நடத்துவதற்கு எங்களுக்கு அரசியல்சாசன உரிமை இருக்கிறது. அதை நாங்கள் பயன்படுத்தி நிச்சயம் டெல்லிக்குள் நுழைவோம்.
பேரணி நிச்சயம் நடக்கும்
அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளுக்கு நாங்கள் செல்லமாட்டோம். இதனால் அரசின் குடியரசு தின அணிவகுப்புக்கு எந்த இடையூறும் நேராது. எங்கள் டிராக்டர்களில் தேசியக்கொடியும், எங்கள் அமைப்புகளின் கொடியும் இருக்கும். இந்த பேரணியை முடித்து மீண்டும் எங்கள் போராட்டக்களத்துக்கே வந்துவிடுவோம். இதில் டெல்லி போலீசாருக்கு ஆட்சேபனைகள் இருப்பின், பேரணி செல்ல வேண்டிய பாதைகள் குறித்து எங்களிடம் அறிவிக்கலாம் அதை நாங்கள் பரிசீலித்து செயல்படுத்துவோம் என்றனர்.
மேலும் படிக்க...
PKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு! முழு விபரம் உள்ளே!
பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு!
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!