தக்காளி விலை தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டு தக்காளி அறுவடைக்கு தட்பவெப்பநிலை ஏற்புடையதாக இல்லை எனவும், விவசாயிகள் நிழல் வலை பயன்படுத்தி இருந்தால் மகசூல் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளதாக தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டீன் பி.ஐரீன் வேதமோனி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள பொதுமக்களின் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது தக்காளி போன்ற காய்கறிகளின் விலையேற்றம். கோவையில் நேற்று தக்காளி கிலோவுக்கு அதிகப்பட்சமாக ரூ.130-க்கு விற்பனையானது. வரத்து சரிந்ததே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
இருப்பினும் மூன்று மாதங்களுக்கு முன் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் பயிர்களை அழித்து விட்டதால், தற்போது வரத்து பாதித்துள்ளதாக, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கமிஷன் ஏஜென்ட் பி.மாரீசன் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறுகையில், ''உள்நாட்டு பண்ணைகள் மற்றும் கர்நாடகா, கிருஷ்ணகிரி, உடுமலை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரத்து குறைந்ததால், எம்ஜிஆர் மார்க்கெட்டில் திங்கள்கிழமை நடந்த ஏலத்தில் ரூ.2,450 (25 கிலோ) வரை விலை போனது. சாதாரண நாட்களில், சந்தைக்கு, நாள் ஒன்றுக்கு, 2,300 டன் வரை தக்காளி வரத்து இருந்த நிலையில் தற்போது, 300 - 400 டன்னாக குறைந்துள்ளது” என்றார்.
கோவை மாதம்பட்டியைச் சேர்ந்த விவசாயி எம்.வடிவேல் கூறுகையில், ''திங்கட்கிழமை நிலவரப்படி பூலுவப்பட்டி மார்க்கெட்டில் தரம் வாரியாக முதல் தரம் (பெரிய அளவு) டிப்பர் ஒன்றுக்கு 1,650 ரூபாய் (14 கிலோ), இரண்டாம் தரம் (நடுத்தரம்) ரூ. 1,300 மற்றும் மூன்றாம் தரம் (சிறியது) ரூ 1,000 வரை விலை போனது. காலப்போக்கில் விலை உயர்ந்தாலும், தட்பவெப்ப நிலை காரணமாக விளைச்சல் மிகவும் குறைவு. மார்ச் மாதம், ஒரு குட்டைக்கு 40 ரூபாய் விலை இருந்ததால், ஒரு ஏக்கர் பயிரை அழித்தேன்.” என்றார்.
விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் (அரசியல் சார்பற்ற) பி.கந்தசாமி கூறுகையில், “ஒரு ஏக்கர் தக்காளி சாகுபடிக்கு ரூ.85,000 வரை இடுபொருள் செலவாகும். சந்தையில் அதிகப்படியான வரத்து கிடைத்தாலும், சந்தையில் விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.3க்கு குறைவாகவே வழங்கப்படுகிறது. வேறு வழியின்றி, பல விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லாமல், தங்கள் விளைபொருட்களை அழித்துவிட்டனர்” என்றார்.
நிழல் வலை அமைத்தால் பயன் தரும்:
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டீன் பி ஐரீன் வேதமோனி கூறுகையில், “தக்காளி அறுவடைக்கு தட்பவெப்பநிலை ஏற்புடையதாக இல்லை. வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தால், மகசூல் வெகுவாகக் குறையும். பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் நிழல் வலைகளை அமைத்து, வயலின் உள்ளே வெப்பநிலையை ஐந்து டிகிரி குறைக்க வேண்டும். விவசாயிகள் சிறந்த சாகுபடிக்கும், மகசூலுக்கும் இம்முறையை மாற்றியமைக்க வேண்டும். நிழல் வலை அமைப்பதற்கு, அரசாங்கம் 50% மானியம் வழங்குகிறது,” என்று ஐரீன் மேலும் கூறினார்.
வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இணை இயக்குநர் கே.பெருமாள்சாமி கூறுகையில், " உழவர்சந்தையில் தக்காளி கிலோ 95 - 100 ரூபாய்க்கு விற்பனையானது. குளிர்பதன கிடங்கு வசதிகள் இருந்தும், அதிகபட்சமாக இரண்டு நாட்களுக்கு விளைபொருட்களை வைத்திருக்க முடியவில்லை” என வேதனை தெரிவித்தார்.
pic courtesy: farmers trend
மேலும் காண்க:
இந்தியாவில் வேகமெடுக்கும் கருப்பு சிப்பாய் ஈ வளர்ப்பு- விவசாயிகள் ஆர்வம்