நெல்லுக்கு மாற்றாகப் பருத்தி விளைச்சல் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர், திருவாரூர் விவசாயிகள். நெல் உற்பத்திக்கு பெயர் போன திருவாரூரில் இதுவரை இல்லாத அளவுக்கு பருத்தி சாகுபடி அதிகரித்து இருக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் நெல் சாகுபடியே முதன்மையான தொழிலாக இருந்து வருகின்றது. தமிழ்நாட்டின் நெல் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாகத் திருவாரூர் இருந்து வருகின்றது. அதே நேரத்தில் இயற்கை பேரிடர்கள் மற்றும் தண்ணீர் பிரச்னை உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இதனால் நெல்லுக்கு மாற்றாக பருத்தியின் பக்கம் கவனத்தை திரும்பி இருக்கின்றனர் திருவாரூர் பகுதி விவசாயிகள்.
குறிப்பாகத் தண்ணீர் பிரச்னை கருத்தில் கொண்டு, கோடையில் நெல் சாகுபடியினைக் கைவிடுத்துப் பருத்தி சாகுபடியினைத் தொடங்கியுள்ளனர். நெல் சாகுபடிக்கு ஆகும் செலவை விட குறைவான செலவே பருத்திக்கு தேவைப்படுகிறது என்பதாலும், நான்கில் ஒரு பங்கு நீரே பருத்திக்கு போதுமானது என்பதால் அதிக லாபம் ஈட்ட முடிகின்றது என திருவாரூர் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதே போன்று பல்வேறு சாதகமான அம்சங்கள் இருப்பதால், வலங்கைமான், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பருத்தி சாகுபடி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முதலில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான பருத்தி, கடந்த ஆண்டு 110 ரூபாயை எட்டியது.அதன் விளைவாக மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 41 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு நல்ல விளைச்சலும் கிடைத்துள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க