புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு தடை விதிக்க கோரும் மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் இந்த மனுவை மத்திய அரசு திரும்பப் பெறவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள் போராட்டம்
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் முற்றுகை போராட்டம் இன்று 57-வது நாளாக நீடித்து வருகிறது.
10-வது சுற்று பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கத் தலைவர்களுடன் 9 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று மீண்டும் மத்திய அரசு விவசாய தலைவர்களுடன் 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
டிராக்டர் பேரணி
இதனிடையே விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக குடியரசு தினத்தன்று (ஜனவரி 26)டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த பேரணிக்கு இது வரை டெல்லி காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை.
விவசாயிகள் பிடிவாதம்
இந்த பேரணியால் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் மற்றும் ராணுவ அணிவகுப்பு போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கும் காவல்துறையினர், டெல்லி நகருக்கு வெளியே போராட்டத்தை நடத்திக் கொள்ள விவசாயிகளை வலியுறுத்தியது. இருப்பினும் அதை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி நகருக்குள்தான் போராட்டத்தை நடத்துவோம் என்று பிடிவாதமாக கூறி வருகிறார்கள்.
மனுவை விசாரிக்க உச்சிநீதிமன்றம் மறுப்பு
டெல்லியில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக காவல்துறை முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு மீண்டும் வீசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய இடைக்கால மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஏற்கனவே கூறியதுபோன்று, விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை தான் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!
நிவாரணம் கோரி 22ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம்- பி.ஆர். பாண்டியன் தகவல்!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!