News

Friday, 04 March 2022 10:31 AM , by: Elavarse Sivakumar

கொரோனா வைரஸ் தொற்றுக் குறைந்துள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ- மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுமார் 20 மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அரசு மேற்கொண்டத் தீவிர நடவடிக்கை காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களும், ஆர்வத்துடன் பள்ளிகளுக்குச் சென்று பயின்று வருகின்றனர். 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்வைக் காரணம் காட்டி, கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஓரம் கட்டும் பணியில் தனியார் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறைக்கு அடுத்தடுத்துப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்கவைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்திருப்பது தெரியவந்துள்ளது. எந்த சூழ்நிலையிலும் இது போல கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்திற்காக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் அவர்களை வெளியில் அனுப்புவதும் பெற்றோர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும் அடிப்படைக் கல்வி உரிமையை மறுக்கின்ற செயலாகும்.


எனவே, மாணாக்கர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு மேற்படி நிகழ்வுபோல் இனிவரும் காலங்களில் எந்தவொரு மெட்ரிகுலேசன் பள்ளியிலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

இதற்கு ஏற்றவாறுப் பள்ளி நிர்வாகத்திற்குத் தக்க அறிவுரைகள் வழங்கி, அதனை அவ்வப்போது பள்ளிகளில் செயல்படுத்துவதைப் பள்ளி ஆய்வின் போதும் பள்ளிப் பார்வையின் போதும் மாவட்ட ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததாகப் புகார் ஏதும் பெறப்பட்டால் அதன் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிச் கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!

இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)