அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில் 40 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் 1 கோடி முதல் 1.2 கோடி டன் வரை அரிசி உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே உள்நாட்டில் பற்றாக்குறையை தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாசுமதி அல்லாத அரிசிகளின் (புழுங்கல் அரிசி தவிர) ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிதாக 20 சதவீத ஏற்றுமதி வரியையும் விதித்தது. இது கடந்த 10ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், உடைந்த அரிசி (குருணை) ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னதாக கோதுமை ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்தது.
இதுதொடர்பாக மத்திய உணவு செயலாளர் சுதான்ஷூ பாண்டே கூறுகையில், உடைந்த அரிசி ஏற்றுமதியில் முற்றிலும் அசாதாரணமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உடைந்த தானியங்கள் கால்நடைத் தீவனம் மற்றும் எத்தனால் கலப்பு திட்டத்துக்கும் போதுமான அளவில் கிடைக்கவில்லை. எனவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் நிலவிய வறட்சி ஆகியவை காரணமாக, கடந்தாண்டை விட இந்தாண்டு நெல் பயிரிடும் பரப்பளவு கணிசமாக குறைந்திருக்கும் காரணத்தினால், உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோழி வளர்ப்புத் துறையில் குருணை அரிசி தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. கோழி வளர்ப்புத் துறைக்கான உள்ளீடு செலவில் குருணை அரிசி தீவனத்தின் பங்களிப்பு 60 சதவீதம் ஆகும் என்பது குறிப்பிடதக்கது. எனவே, விலை உயர்வால் பாதிப்புக்கு தள்ளப்படும் நிலை எற்பட்டுள்ளது.
காரிப் பருவத்தில் நெல் சாகுபடி பரப்பளவு முந்தைய பருவத்தை விட 5 முதல் 6 சதவீதம் குறைவாக உள்ளது. இதனால் காரிப் பருவத்தில் அரிசி உற்பத்தியில் 10 முதல் 12 மில்லியன் டன்கள் குறையும் வாய்ப்புள்ளது. எனவே குருணை அரிசி ஏற்றுமதி மீதான தடை முக்கியத்துவம் பெறுகிறது. இது பயிர் வாய்ப்புகள் மற்றும் முன்னோக்கி செல்லும் விலைகள் இரண்டிலும் தாக்கத்தை எற்படுத்தும். இந்நிலையிலும், சில நிபந்தனைகளுடன் குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
பண்டிகைகளை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸின் விற்பனை கண்காட்சி ஏற்பாடு மற்றும் பல தகவல்கள்
தோட்டக்கலையின் இயந்திரமயமாக்கல் திட்டம்: டிரேக்டர் மற்றும் பவர் டில்லருக்கு மானியம்!