கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தனர். விவசாயிகளை கௌரவிக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வின் முதன்மை ஸ்பான்சராக மஹிந்திரா டிராக்டர்ஸ் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மொத்தம் 16 பிரிவுகளின் கீழ் விவசாயிகளிடமிருந்து விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் தேர்வான விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் டிசம்பர் 6,7,8 நடைப்பெற்றது. இந்த விருது நிகழ்வோடு வேளாண் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா முழுவதுமிருந்து விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பித்த நிலையில் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாநிலத்திலிருந்து வேளாண் துறையில் சிறந்து விளங்குவதோடு அதிக வருமானம் ஈட்டும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் , கமுதி வட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ராமர் அவர்கள் மாநில அளவிலான விருதுக்கு KVK சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். MFOI நிகழ்வின் இரண்டாம் நாள் அன்று, SML (சல்பர் மில்ஸ் லிமிடெட்) இயக்குநர் கோமல் ஷா புகன்வாலா பங்கேற்றிருந்த நிலையில் அவரிடமிருந்து மாநில அளவிலான மில்லினியர் விவசாயி விருதினை ராமர் பெற்றார்.
அவரைத்தொடர்ந்து தமிழக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற விவசாயிகளும் விருதினை பெற்றனர். விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்ப காத்திருக்கும் MFOI kisan bharat yatra- வாகனத்தையும் ,மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்வின் இறுதி நாளான டிசம்பர் 8 ஆம் தேதி, Richest farmer of India விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் பிரேசில் நாட்டுத் தூதரக அதிகாரி கென்னத் பெலிக்ஸ் ஹசின்ஸ்கிடா நோப்ரேகா, நெதர்லாந்து தூதரக அதிகாரி (விவசாய ஆலோசகர்) மைக்கேல்வன் எர்கல் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தனர். நிகழ்வின் முதன்மை விருந்தினராக ஒன்றிய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா தலைமை தாங்கினார்.
மஹிந்திரா டிராக்டர்ஸ் வழங்கும் MFOI 2023 விருது விழாவில் பில்லினியர் விருது ( Richest farmer of India- RFOI) கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் ஸ்ரீனிவாஸ்பூர் தாலுக்கா, குண்டமானட்டா கிராமத்தைச் சேர்ந்த ஏ.வி.ரத்னம்மாவுக்கு வழங்கப்பட்டது. RFOI விருதுக்கு இருவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஏ.வி.ரத்னாம்மாவுடன்- சட்டீஸ்கர் மாநிலத்தை சார்ந்த ராஜாராம் திரிபாதியும் வென்றுள்ளார். இவர்களின் வேளாண் நடைமுறைகள் மற்ற விவசாயிகளுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
க்ரிஷி ஜாக்ரன் மற்றும் அக்ரிகல்ச்சர் வேர்ல்ட் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் எம்.சி. டோமினிக் நிகழ்வு குறித்து கூறுகையில், “MFOI விருதுகள்-2023 இன்று வரை விவசாயிகள் தொடர்பான விருது நிகழ்ச்சியாக அதிகம் பேசப்படுகிறது. இது சமூக வலைதளங்கள் மூலம் உலகம் முழுவதும் பார்க்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயம் குறித்த மக்களின் எண்ணங்களை மாற்றுவதே இந்த விருது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததன் முக்கிய நோக்கம். விவசாயம் தவிர மற்ற துறைகளைப் பார்க்கும்போது யாரோ ஒருவரை முன்மாதிரியாகக் காட்டுகிறார்கள்”என்றார்.
ஆண்டுக்கு 1.18 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி RFOI விருதினை வென்றார் பெண் விவசாயி ஏ.வி.ரத்னம்மா
ஆனால், “ விவசாயத் துறையில் எந்த முன்மாதிரியும் இல்லை அல்லது பெரிய அளவில் முன்வைக்கப்படவில்லை. இதை மனதில் வைத்துத்தான் இந்த முயற்சியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. 27 ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட கனவு தற்போது நனவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்- பயிர் காப்பீடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு
இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- RMC chennai எச்சரிக்கை