தமிழகத்தில் 6 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதில் உள்ள சிரமத்தைப் போக்கும் வகையில், விலையில்லா அதாவது இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் இதுவரை, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இந்நலையில், தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மூன்று மாதங்களுக்குள் மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தொழிற்பயிற்சி (ITI) பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆகியோருக்கான 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல் செய்ய ஏற்கனவே ஒப்பந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது.
மேலும் இந்த ஒப்பந்தத்தில் தகுதியான மிதிவண்டிகள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலை குறைப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
கொள்முதல் குழுவால் விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு விரைவில் 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல் செய்து 3 மாத காலத்திற்குள் மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க...
மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!
குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!