ஒரு குறிப்பிட்ட சில வந்தே பாரத் ரயில்களின் பயண கட்டணத்தினை குறைக்க இரயில்வே துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பயண கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுவதால் ஒரு சில வந்தே பாரத் ரயிலுக்கு போதிய வரவேற்பு இல்லை. அதற்கு தீர்வு காணும் வகையில் குறைக்கப்பட்ட புதிய கட்டண முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் இதுவரை 46 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் நாட்டின் அனைத்து ரயில்-மின்மயமாக்கப்பட்ட மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன. இதில் சில குறுகிய தூரம் இயங்கும் வந்தே பாரத் ரயில்களில் எதிர்ப்பார்த்த அளவினை விட குறைவாகவே பொதுமக்கள் பயணிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை அதிகரிக்கும் வகையில் கட்டணத்தை மறுஆய்வு செய்து, விலைகளைக் குறைப்பதற்கும், அதிக பயணிகளை ஈர்க்கவும் இரயில்வே துறை முடிவெடுத்துள்ளது.
முதற்கட்டமாக இந்த கட்டண குறைப்பு, இந்தூர்-போபால், போபால்-ஜபல்பூர் மற்றும் நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் ரயில்களில் மேற்கொள்ளப்படலாம என அறியப்படுகிறது. அதற்கு காரணம், போபால்-ஜபல்பூர் வந்தே பாரத் ரயில் அதிகப்பட்சம் 29 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். இதைப்போல் இந்தூர்-போபால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அதிகப்பட்சம் 21 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். தற்போது இந்த ரயில்களில் ஏசி நாற்காலி கார் டிக்கெட்டுக்கு ரூ.950 மற்றும் எக்ஸிகியூட்டிவ் நாற்காலி கார் டிக்கெட்டுக்கு ரூ.1,525 கட்டணம் வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே துறையின் ஆய்வுக்குப் பிறகு, அதிகமான மக்கள் ரயில் சேவையைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, இந்த வந்தே பாரத் சேவையின் கட்டணம் கணிசமாகக் குறைக்கப்படலாம் என்று அறிக்கை கூறுகிறது.
மற்றொரு ரயில் தடமான நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கட்டணமும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த இரயில் சராசரியாக 55 சதவிகிதம் பேர் பயணிக்கிறார்கள். பயண நேரம் சுமார் 5 மணி 30 நிமிடங்கள் மட்டுமே. டிக்கெட் விலைகள் குறைக்கப்பட்டால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என ரயில்வே வட்டாரங்கள் கருதுகின்றனர்.
நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் விரைவு ரயிலில் எக்சிகியூட்டிவ் வகுப்பிற்கான கட்டணம் ரூ.2,045 ஆகவும், நாற்காலி காரின் கட்டணம் ரூ.1,075 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் ரயில், திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் ரயில், காந்திநகர்-மும்பை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்) ஆகியவற்றில் அதிக பயணிகள் பயணிக்கின்றனர் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ரயில்வே கட்டணங்களை வந்தே பாரத் ரயிலில் குறைப்பது போன்று, மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பயணிகளின் பெட்டியினை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் பொதுமக்கள் தரப்பில் நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளிலும் ஏசி பெட்டிகள் மற்றும் எக்ஸிகியூடிவ் பெட்டிகள் ஆகியவற்றின் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்கப்படுவதாக தற்போது ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
pic courtesy: MId-day
மேலும் காண்க:
மகளிர் உரிமைத் தொகை- கூட்டுக்குடும்பமாக வாழும் பெண்கள் அதிர்ச்சி