திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட மிக அதிக கன மழை காரணமாக 25581.18 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் 02.12.2023 முதல் 05.12.2023 வரை பெய்த மிக அதிக கன மழையினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புயலின் போது திருவள்ளூர் மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. திருவள்ளூர் உட்பட சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு போன்ற வட கடலோர மாவட்டங்களும் மிக்ஜாம் புயலினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் மொத்தமாக 25581.18 ஹெக்டர் பரப்பளவு நீரில் மூழ்கியுள்ளன என முதல் நிலை அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பாதிப்படைந்த பயிர்களின் விவரம்:
வேளாண் பயிர்களில் நெல் 23877 ஹெக்டர், பயறு வகை பயிர்கள் 67 ஹெக்டர், எண்ணெய் வித்துகள் 215 ஹெக்டர் ஆக மொத்தமாக 24159 ஹெக்டர் பரப்பளவிலும், தோட்டக்கலை பயிர்களில் பழங்கள் 313 ஹெக்டர், காய்கறிகள் 269 ஹெக்டர், பூக்கள் 727.5 ஹெக்டர், மூலிகை மற்றும் வாசனை பயிர்கள் 112:18 ஹெக்டர் ஆக மொத்தமாக 1422.18 ஹெக்டர் பரப்பளவில் நீரில் மூழ்கியுள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களை வருவாய் துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை கள பணியாளர்கள் உடனடியாக ஒருங்கிணைந்து கூட்டாக கணக்கெடுப்பு செய்து பயிர் சேத அறிக்கை ஒரு வாரத்திற்குள் சமர்பிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உத்தரவிடப்பட்டு தற்போது பயிர் சேத கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கணக்கெடுப்பு பணியை துரிதப்படுத்தும் விதமாக வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை துறையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து வட்டாரங்களிலும் கள ஆய்வு பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட மிக அதிக கன மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான உரிய நிவாரணம் அரசிடமிருந்து பெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்ப்பாராத காலநிலை மாற்றம், நோய்த்தாக்குதல் போன்றவற்றினால் விளைச்சல், மகசூல் பாதிக்கும் சமயங்களில் விவசாயிகள் அரசின் நிவாரணம் பெற பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைய அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Read also:
சில்லரை மற்றும் மொத்த விற்பனையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்!
டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் கனமழை- IMD விடுத்த எச்சரிக்கை