அரிசி, கொப்பரை போன்றவற்றிற்கு மட்டும் அரசு கொள்முதல் செய்து வரும் நிலையில், அனைத்து விளைப் பொருட்களையும் அரசே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை தான் யோசித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Chief Minister Edappadi K. Palaniswami) தெரிவித்துளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைசர் பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளின் தேவை அறிந்து நம் அதிமுக அரசு செயல்பட்டுவதாக கூறினார்.
குடிமராமத்து திட்டம்
விவசாயம் என்று சொன்னாலே அதற்கு நீர் தேவை. விவசாயத்திற்கு தேவையான நீரை எங்களுடைய அரசு சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்ததாக குறிப்பிட்டார். இதன் மூலம் ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் ஆகியவற்றை தூர் வாரி ஆழப்படுத்தி தண்ணீரை சேமித்து வேளாண் மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கும், குடிநீர் கிடைப்பதற்கும் வழிவகை செய்திருக்கின்றோம் என்றார். ஆண்டுதோறும், குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏரிகள், குளங்களை தூர் வாரி கொண்டிருக்கிறோம். பல நதிகளிலும், ஓடைகளிலும் தண்ணீர் வீணாகாமல் தேங்கி நிற்பதற்காக தடுப்பணைகள் கட்டி நீர் தேக்கத்தை உண்டாக்கி விவசாய பெருமக்களுக்கு தேவையான நீரை தந்து கொண்டு இருக்கிறோம் என்றார்.
அதிக காப்பீடு பெற்ற தமிழகம்
வறட்சி வந்தால் வறட்சி நிவாரணம் கொடுக்கிறோம் என்று கூறிய முதல்வர், பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இழப்பீட்டுத் தொகை பெற்று தருகிறோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இழப்பீட்டு தொகையை அதிகமாக பெற்று தந்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 9400 கோடி ரூபாய் பயிர் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசு பெற்று தந்துள்ளதாக தெரிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2,500 இன்று முதல் ரேஷன் கடைகளில் வினியோகம்!!
நவீன கால்நடைகள் உருவாக்கம்
தான் அமெரிக்காவில் உள்ள பால் பண்ணைக்கு சென்ற போது, அங்கே ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் தருவதாக தெரிவித்த பழனிசாமி, அதேபோல், இங்குள்ள நம் விவசாயிகளுக்காக நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த, அதிக அளவில் பால் தருகின்ற கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்தார். அதேபோல், நம் தமிழகத்தில் ஆடு வளர்ப்பு அதிகமாக இருக்கின்றது.
இந்த ஆராய்ச்சி நிலையம் மூலம் அதிக எடை கொண்ட கலப்பின ஆடுகளை உருவாக்க இருக்கின்றோம். இதன்மூலம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமான கிடைக்கின்ற வாய்ப்பை பெறுகின்றார்கள். அதோடு இந்த ஆராய்ச்சி நிலையத்தில், மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற முறைகளை விவசாயிகளுக்கு கற்று தந்து, அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்கின்றோம் என்றார்.
ஊட்டியில் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விந்து ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்ல, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளுக்கு சிறந்த விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக திண்டிவனத்தில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவுப் பூங்கா ஒன்று உருவாக்கி வருகிறோம் என்றார்.
குளிர் பதன கிடங்குகள்
காய்கறி கனிகளை விளைவிக்கும் விவசாயிகளின் தேவைக்காக தமிழகத்தில் முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் தலா 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்பதனக் கிடங்குகள் உருவாக்கப்பட உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்கள் விற்பனையாகவில்லை என்றால், இந்த குளிர்பதனக் கிடங்கில் வைத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியாகும் இடங்களில், இந்த குளிர்பதனக் கிடங்குகள் விரைவில் அமைக்கப்படும்.
விவசாயிகளை போற்றி புகழக் கூடிய அரசு அதிமுக அரசும், உழைக்கின்ற வர்க்கத்தை மதிக்கின்ற அரசு தமிழக அரசு என்றும் தெரிவித்தார். நெல், கொப்பரைகளைப் போன்று அனைத்து விளை பொருட்களையும் அரசே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை தான் யோசித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துளார். இதன் மூலம் விவசாயிகளின் பிரச்சனைகள் எளிதில் தீர்ந்து அவர்ளின் லாபமும் அதிகரிக்கும் என்றார்.
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!