சென்னை ஐ.ஐ.டி. பற்றி அறிந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் 21 பேர் முதல் முறையாக விமானத்தில் வந்தனர். உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில் அரசு பள்ளி மாணவர்களும் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்க திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.
தேசிய நுழைவுத் தேர்வு (National Entrance Exam)
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தேர்வு வைத்து அதில் சிறப்பாக எழுதிய 21 பேருக்கு ஜே.இ.இ. எனும் தேசிய நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில் ஐ.ஐ.டி.யில் படிக்க நினைக்கும் மாணவர்களை அங்கு நேரடியாக அழைத்துச் சென்று சிறந்த அனுபவத்தை வழங்க 21 பேரையும் சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து மாணவர்களை அழைத்து வந்த மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பிரபு ரஞ்சித் எடிசன் கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் அதிகளவில் சேர வேண்டும் என்பதற்காக கலெக்டர் விஷ்ணு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட தேர்வில் சிறப்பாக தேர்வு எழுதிய 13 பள்ளிகளைச் சேர்ந்த 13 மாணவியர் மற்றும் எட்டு மாணவர் என 21 பேரை விமானத்தில் சென்னை அழைத்து வந்துள்ளோம். இவர்கள் அனைவரும் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தனர். இவர்களுக்கான ஜே.இ.இ. பயிற்சியும் 'ஆன்லைன்' வாயிலாக வழங்கப்படுகிறது. மாணவியருடன் ஆசிரியை ஷியாமளா பாய் சென்னை வந்துள்ளார்.
பேட்டை காமராஜர் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெங்கட்ராகவன் கூறியதாவது: ஐ.ஐ.டி.யில் படிக்க வேண்டும் என்பது ஆசை. இதற்காக மாவட்ட அளவில் நடைபெற்ற தேர்வில் சிறப்பாக பங்காற்றி ஜே.இ.இ. தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
கலெக்டர் எங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கி உள்ளார். முதல் முறையாக விமானத்தில் பயணித்தோம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. விமானத்தில் வந்தது சிறந்த அனுபவமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஐ.ஐ.டி.யில் உள்ள ஒவ்வொரு துறையாக தெரிந்து கொண்டோம். ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஐ.டி.யில் சேர்வோம்.
மேலும் படிக்க
18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை!
குழந்தைகளுக்கும் விவசாயத்தை கற்றுத் தர வேண்டும்: நடிகர் சூர்யா!