ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக, அவற்றை ஜி.பி.எஸ்., மூலம் கண்காணித்து வழி ஏற்படுத்தும் திட்டம், கோவை மாநகரில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: கோவை மாநகரில் அரசு சார்பில் மட்டுமின்றி, மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் சார்பிலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
ஆம்புலன்ஸ் (Ambulance)
வாகனங்கள், நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் வரும்போது அவற்றுக்கு முன்னுரிமை அளித்து, போக்குவரத்து போலீசார் வழி ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி இருந்தும் சில நேரங்களில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கி விடுகின்றன. இதை தவிர்க்கும் நோக்கத்துடன், போலீஸ் சார்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களிலும், ஜி.பி.எஸ்., எனப்படும் இருப்பிட கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம், ஆம்புலன்ஸ் வாகனங்களின் நடமாட்டத்தை, கட்டுப்பாட்டு அறை, கமிஷனர் அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்க முடியும்.
ஒரு ஆம்புலன்ஸ், குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து, அடிபட்டவர் அல்லது நோயாளியுடன் புறப்படும்போதே, போலீஸ் கண்காணிப்புக்குள் வந்து விடும். அதற்கு தகுந்தபடி, முன்கூட்டியே வழித்தட போக்குவரத்தை சரி செய்து, தயார் நிலையில் வைக்க முடியும்.
ஆம்புலன்ஸ்கள், நோயாளி எவரும் இல்லாமலேயே சைரன் பொருத்திய விளக்குடன் சாலையில் இயக்கப்படுவதாகவும், புகார்கள் எழுகின்றன. இத்தகைய புகார்கள், ஜி.பி.எஸ்., கண்காணிப்பு இருப்பதால் தவிர்க்கப்படும். ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்துவது போலேவே, அவசர மருத்துவ பணிக்காக செல்லும் டாக்டர் வாகனங்களுக்கும், முன்னுரிமை அளித்து வழி ஏற்படுத்தி தரும் திட்டமும், விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என்று கமிஷனர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
வாட்ஸ்அப்பில் புலிக்குட்டி விற்பனை: வனத்துறை அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் தனியார் ரயில்கள் இயக்கம்: பயணிகளுக்கு அதிர்ச்சி!