கன்னியாகுமரி மாவட்டத்தில், இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை (Heavy Rain) காரணமாக பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் யாஸ் புயல் உருவாகியுள்ளது. இதனால் ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசாவில் கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வந்தது. இந்த புயல், மேலும் வலுவடைந்து, அதிதீவிர புயலாக மாறியது. வங்கக் கடலில் உருவாகியுள்ள 'யாஸ்' புயல் (Yaas Cyclone), ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் இன்று காலை கரையைக் கடந்தது.
யாஸ் புயலால் கனமழை
வங்கக்கடலில் உருவான, யாஸ் புயல், ஒடிசா, மேற்குவங்க கடற்கரையை நோக்கி கரையை கடந்து வருகிறது. இந்த புயலின் தாக்கம், தமிழகத்தின் கன்னியாகுமரி வரையில் இருக்கிறது. கன்னியாகுமரியில் புயல், கனமழையால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. புத்தேரி, கோட்டார், வடசேரி உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் சில இடிந்தன. தாழ்வான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. கருங்கல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகுளம், காக்கைகுளம், தாமரைகுளம் என மூன்று குளங்கள் நிரம்பி வழிந்து, 150க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் (Flood) சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவீன் குமார் அபிநபு நேரில் சென்று பார்வையிட்டார். தேங்காய்பட்டணம் துறைமுகம், குழித்துறை பாலம் போன்ற பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்ட அவர், பாதிப்பு குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த அவர் உத்தரவிட்டார்.
மீட்புப் பணி
கன்னியாகுமரியில் மீட்பு பணிக்காக மாவட்டத்தில் உள்ள பேரிடர் மீட்பு படையினர் 140 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 30 பேரிடர் மீட்பு படையினரும், 144 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை நீடிக்கும்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். இன்று (மே 26) தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி பகுதியில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!
நீர்வளத் திட்டங்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆய்வு!