தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இன்று 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்றைய தினம் இது வரை இல்லாத அளவிற்கு அதிகப்பட்சமாக சென்னை விமான நிலையம் பகுதியில் 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. வெப்பத்தின் தாக்கம் இனி வரும் நாட்களிலும் அதிகரிக்ககூடும் என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த தகவல்கள் பின்வருமாறு-
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (17.05.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18.05.2023 முதல் 21.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
17.05.2023 & 18.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
17.05.2023: மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்த படுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 1.03.2023 முதல் 17.05.2023 வரை பெய்த மொத்த மழையளவு 178.3 மிமீ. இது இயல்பை விட 84 சதவீதம் அதிகமாகும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
image courtesy: unsplash
மேலும் காண்க:
38-ல் இருந்து 42- அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முதல்வர்