சென்னை மெரினாக் கடற்கரையில் படகு போக்குவரத்து, கொடைக்கானல், ராமேஸ்வரம், மதுரைக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா உள்ளிட்டப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு (Ministerial announcement)
தமிழக சட்டப்பேரவைக்கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சட்டசபையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்த, அமைச்சர் மதிவேந்தன் பின்வரும் அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
முப்பரிமாண ஒளியூட்டம் (Three-dimensional lighting)
இதன்படி, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை, இரவிலும் கண்டு மகிழும் வகையில், லேசர் தொழில் நுட்பத்தில் முப்பரிமாண ஒளியூட்டம் அமைக்கப்படும்.
தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரான பூம்புகார் புனரமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
மாநிலத்தில் உள்ள 300 சுற்றுலா தலங்களில், சர்வதேச தரத்திற்கு இணையான வசதிகள் ஏற்படுத்தும் வகையில், சுற்றுலா மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள அணைகட்டுகள், நீர்தேக்கங்கள் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுற்றுலா தலமாக மாற்றப்படும்.
சுற்றுலா தலங்களை மேம்படுப்படுத்துதல் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா கொள்கை வகுக்கப்படும்.
பல்வேறு வசதிகளுடன் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை மேம்படுத்தப்படும்.
ஹெலிகாப்டர் சுற்றுலா (Helicopter tourism)
மதுரை, கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா துவங்க, 1 கோடி ரூபாய் செலவில் ஹெலிபேட் அமைக்கப்படும்.
முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும். தர்மபுரியில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலாதலம் மேம்படுத்தப்படும்.
ஜவ்வாது மலையில், பீமா நீர்வீழ்ச்சி பகுதியை மேம்படுத்துதல், ஜமுனாமரத்துார் ஏரியில் புதிய படகு குழாம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். யாத்ரிகர்கள், சுற்றுலா பயணிகள் வசதிக்காக, சிறந்த சுற்றுலா தலமாக ராமேஸ்வரம் மேம்படுத்தப்படும்.
பாராகிளைடிங் (Paragliding)
ஏலகிரி மலையில், பாராகிளைடிங், மலையேற்றம், இயற்கை வழி நடை பயணம், திறந்தவெளி முகாம்கள் போன்ற சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும்.
வெளிநாடுகளில் உள்ளதைப்போல, சுற்றுலா பயணியரைக் கவரும் வகையில், ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே, சொகுசு கப்பல் சேவை துவங்குவது குறித்து சாத்தியகூறுகள் ஆராயப்படும்.
படகு சவாரி (Boating)
மெரினா, கோவளம், மாமல்லபுரம், முதலியார்குப்பம், மனோரா, அரியமான், முட்டம் ஆகிய கடற்கரைகளுக்கு, ஐ.நா., உலக சுற்றுலா அமைப்பால் வழங்கப்படும் நீலக்கொடி அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்
மெரினாக் கடற்கரையில், ராயல் மெட்ராஸ் யாட் கிளப்புடன் இணைந்து, பொழுதுபோக்கு படகு சவாரி துவங்கப்படும்.
பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக, பூங்கா, காட்சி கோபுரம், படகு குழாம், தங்கும் அறை, உணவகம் போன்ற வசதிகள் மேம்படுத்தப்படும். முதலியார்குப்பம் படகு குழாம் மற்றும் அருகில் உள்ள தீவுப்பகுதிகள் மேம்படுத்தப்படும்.
கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடம் மற்றும் வாலாங்குளம் ஏரியில், புதிய படகு குழாம்கள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
நீங்கள் நத்தை சாப்பிடுவதற்கு 5 அற்புதமான காரணங்கள்
பீட்ரூட்டின் பக்க விளைவுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பண்புகள்