சீனாவில் ஒருவரை பலி வாங்கிய 'மங்கி பி வைரஸ் (Monkey B Virus)' கொரோனா வைரஸ் போல, மனிதருக்கு மனிதர் பரவும் வகையைச் சேர்ந்தது அல்ல என்ற ஆறுதலான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மங்கி பி வைரஸ்
கடந்த மார்ச்சில் சீனாவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் காய்ச்சல், தசை வலி உள்ளிட்ட பாதிப்பிற்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இரு மாதங்களில் இறந்தார். அவரது உமிழ் நீர், சளி, ரத்தம் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் வாயிலாக, குரங்கு மூலமாக பரவும் 'மங்கி பி வைரஸ்' பாதிப்பால் அவர் இறந்தது தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: குரங்கு ஒருவரை கடித்தாலோ அல்லது நகத்தால் கீறினாலோ, மங்கி பி வைரஸ் பரவும். குரங்கின் உமிழ்நீர், மலம், சிறுநீர் போன்றவற்றில் இந்த வைரஸ் காணப்படும். இந்த வைரஸ் பாதித்த குரங்கும் நோய்வாய்ப்பட்டு இறந்து விடும். இது மனிதர்களுக்கு சுலபமாக பரவாது. விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவர்கள், ஆய்வக பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மனிதருக்கு மனிதர் பரவுவதற்கும் வாய்ப்பில்லை. கடந்த 1932ல், இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இதுவரை 50 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 21 பேர் தான் இறந்துள்ளனர்.
மிரட்டும் ஜிகா வைரஸ்- தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
அறிகுறிகள்
கொரோனா போல மங்கி பி வைரசால் காய்ச்சல், தலைவலி, தசை வலி போன்ற அறிகுறிகள் (Symptoms) ஏற்படும். காயங்களில் சிறிய கொப்புளங்கள் உண்டாகும். வயிற்று வலி, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளும் காணப்படும். வைரஸ் பாதிப்பு அதிகரித்தால் மூளை, தண்டுவடம் ஆகியவற்றில் வீக்கம் ஏற்படும். தசை பிடிப்பு, நரம்புக் கோளாறு, மூளை செயலிழப்பு ஆகியவற்றை அடுத்து உயிரிழப்பு நேரிடும்.
குரங்கு கடித்தால் உடனே கடிபட்ட இடத்தை சோப்பு அல்லது அயோடின் கரைசலில் கழுவ வேண்டும். பின் 20 நிமிடங்கள்தொடர்ந்து தண்ணீர் ஊற்றிய பின், மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
மேலும் படிக்க
மாஸ்க் பயன்பாடு 74% குறைவு: மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!
மரணத்தைப் பரிசளிக்கும் குரங்கு பி வைரஸ்- சீனாவில் மருத்துவர் பலியானதால் அச்சம்!