சிறு குறு விவசாயிகள் புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நீர்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்வதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்பட உள்ளது.
அதிகப்பட்சம் ரூ.1.00 இலட்சம் வரை கூட்டுறவு வங்கிகள்/தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வங்கி கடன் மற்றும் அதற்கு இணையான 50 விழுக்காடு அரசின் பின்நிகழ்வு மானியம் (அதிகப்பட்சம் தலா ரூ.50,000/-) வழங்கப்படுகிறது. வங்கி கடன் பெற்று நீர்ப்பாசன அமைப்பு ஏற்படுத்திய பின்னரே அரசின் மானியம் விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தில் பயன்பெற தகுதிகள் என்ன?
கடன் பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினராகவும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி விண்ணப்பப்படிவம் பெற்றுக் கொள்ளலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
பூர்த்தி செய்ய்பட்ட விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், சிறுகுறு விவசாயி சான்று, பட்டா, சிட்டா " அ" பதிவேடு, அடங்கல் நகல், FMB நில வரைபடம், வில்லங்கச்சான்று, நீர்வள ஆதாரச் சான்று (பொதுப்பணித்துறையில் (WRO) பெறப்பட்டது), பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான விலைப்புள்ளி ஆகியவற்றை தவறாது இணைத்தல் வேண்டும்.
இத்தகைய அரசின் மானியத்துடன் கூடிய நீர்ப்பாசனக் கடன் திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் உரிய முறையில் விண்ணப்பித்து தங்கள் விவசாய பணிகளை திறம்பட மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மேற்குறிப்பிட்ட தகவல்களை புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க: