மார்கழி பட்டம் நிலக்கடலை (peanuts) சாகுபடிக்கு ஏற்ற பட்டம். அதிக மகசூல் பெறுவதற்கு தை மாதத்திற்கு முன்பே நிலக்கடலை விதைக்கவேண்டும். நிலக்கடலையில் எண்ணெய் அளவு அதிகமாக இருந்தால் அதன் முளைப்புத்திறன் வேகமாக குறையும். சரியான முளைப்புத்திறன் உள்ள உயிருள்ள விதைகளை பிரித்து எடுத்து விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்.
உயிருள்ள விதைகளை பிரித்தெடுக்கும் முறை:
நன்கு முற்றாத உடைந்த சுருங்கிய மற்றும் நோய் தாக்கிய சிறிய விதைகளை அகற்ற வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 1/2 லிட்டர் என்ற அளவில் 0.5 சதவீத கால்சியம் குளோரைடு (Calcium chloride) உப்புக் கரைசலில் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். சிறிய பருப்பாக இருந்தால் ஏக்கருக்கு 50-55 கிலோ, பெரிய பருப்பாக இருந்தால் 55 - 60 கிலோ விதைப் பருப்பை, 125 கிராம் கால்சியம் குளோரைடு உப்பை 25 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். ஊறவைத்த விதைகளை இரண்டு ஈர சாக்குகளுக்கிடையே மெல்லியதாக பரப்பி 16 மணி நேரம் இருட்டில் மூட்டம் வைக்க வேண்டும். இந்த சமயத்தில் உயிருள்ள விதைகளிலிருந்து சுமார் 5 மி.மீ அளவு முளைக்குருத்து வெளிவரும். இவற்றை தனியே பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை முளைவிட்ட விதைகளை 3 முறை பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த (dry) வேண்டும்.
விதை நேர்த்தி
தேர்வு செய்த விதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பென்டாசிம் (Carbendazim) என்ற பூஞ்சாணக் கொல்லி மருந்தை, 5 மிலி நீரில் கலந்து விதை நேர்த்தி (Seed treatment) செய்து நிழலில் உலர்த்த வேண்டும் அல்லது ஏக்கருக்கு 250 முதல் 300 கிராம் ரைசோபியம் (Rhizobium) உயிர் உரத்துடன் விதைப்பருப்பை அரிசி வடித்த கஞ்சியுடன் கலந்து உடனே விதைக்க வேண்டும். முளைவிடாத இறந்த விதைகளை எண்ணெய் (oil) எடுக்க பயன்படுத்தலாம். இதனால் வயலில் போதுமான அளவு செடிகளை, விதைகளை விரயம் செய்யாமல் பெறலாம்.
விதைகளை கால்சியம் குளோரைடு கரைசலில் ஊற வைப்பதால், கால்சியம் குறைபாட்டால் வரக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்தி 10 முதல் 15 சதவீதம் கூடுதல் விளைச்சலை பெறலாம். பூஞ்சாணக்கொல்லி விதை நேர்த்தி செய்வதால் விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம் . உயிர் உரம் (Bio-fertilizer) கொண்டு விதை நேர்த்தி செய்வதால் காற்றில் உள்ள தழைச்சத்து (Nutrient) நிலைப்படுத்தப்பட்டு உரச்செலவு குறையும்.
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:
சிங்காரலீனா
விதை பரிசோதனை அலுவலர்
கண்ணன்
வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம்
திண்டுக்கல்
97883 56517
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க 100-வது கிசான் விவசாயிகள் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
பூச்சி / நோய்த் தாக்குதலால் சின்ன வெங்காயத்தின் விலையில் பெரும் தாக்கங்கள்!