PM-Kisan: 12வது தவணைக்கான காலக்கெடு 4 நாட்களுக்குள் முடிவு
PM-Kisan மூலம் 12-வது தவணையைப் பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ekyc-யை புதுபிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான காலக்கெடு இன்னும் 4 நாட்களுக்குள் முடிய உள்ளது. எனவே, விவசாயிகள் www.pmkisan.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று அங்கு உள்ள Farmer corner உள்ள eKYC என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு ஆதார் எண்ணை இடுதல் வேண்டும். பின்னர் தொலைபேசியில் வரும் ஓடிபி-யை உள்ளிட்டு PM kissan-இல் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியானதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விமான நிலையத்துக்கு நிலம் வழங்கும் குடும்பத்துக்கு அரசு வேலை: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
சென்னை அருகே பரந்தூரில் 2-வது சர்வதேசப் பசுமை விமான நிலையத்துக்கான நில எடுப்புப் பணியைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கொடுக்கும் குடும்பங்களில் உள்ள படித்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், நிலத்திற்கான மூன்றரைப் பங்கு தொகை வழங்கப்படும் என்றும் தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சிறு குறு தொழில்களுக்குப் பிணையமில்லா கடன்: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
பெருந்தொழில்களைக் காட்டிலும் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” எனும் தலைப்பில் அறிவித்துள்ளார். இதன்படி வீட்டு உபயோக ஜவுளி தொழில், சிறப்பு வகை தொழிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறு, குறு நிறுவனங்களுக்குப் பிணையில்லா கடன் எளிதாக வழங்கப்படும். பட்டியலினப் பழங்குடி மக்கள் “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் துவங்க 30 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட மையத்திலும் ஒரு ஏற்றுமதி வழிகாட்டு மையம் துவங்கப்படும் எனப் பல்வேறு சிறு தொழில் சார்ந்த அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் கண் மருத்துவ இயல் நிலையம்: திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்
சென்னை எழும்பூர் மண்டலக் கண் மருத்துவ இயல் மற்றும் அரசு கண் மருத்துவமைனையின் 200-ஆவது ஆண்டினையொட்டி கட்டப்பட்டுள்ள கட்டடம் உள்ளிட்ட சுமார் 195 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவக் கட்டடங்கள், நவீனக் கருவிகள் மற்றும் மருத்துவ ஊர்திகளின் சேவைகளை இன்று தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். மேலும், காணொளியின் வாயிலாக, மதுரை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தஞ்சாவூர், தேனி, விருதுநகர், திருப்பூர், தூத்துக்குடி, திருவாரூர், திருச்சி, இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளின் புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
சென்னை லயோலா கல்லூரியில் மாணவர் மன்றத்தைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் மாணவர் மன்றத்தினைத் தொடங்கி வைத்தார் தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மாணவர் மன்றத்தின் இலட்சினையும் வெளியிட்டு மாணவர்களிடையே உரையாடினார். அப்போது பேசிய அவர், இளைஞர்கள்தான் வருங்காலச் சமுதாயத்தை வடிவமைக்கப் போகிறவர்கள், எனவே, அனைவருக்கும் ஏற்றத்தாழ்வுகளைச் சீரமைக்கும் பொறுப்பு உண்டு என்பதை அறிந்து, இளைஞர்களுக்கே உண்டான மகிழ்ச்சியைக் கொண்டாடும் அதே வேளையில் சமூகத்தைப் பற்றியும் எப்போதும் சிந்திக்க வேண்டும் என மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க
”தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” : தொழில் திட்டங்கள் அறிவிப்பு