'மிக்ஜாம்' புயல் உருவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு சென்னை வானிலை மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின் விவரம் பின்வருமாறு-
நேற்று (02-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (03-12-2023) காலை 05: 30 மணி அளவில் 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்று, 11:30 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 380 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கம் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03.12.2023 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Read more: நெருங்கியது மிக்ஜாம் புயல்- 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு
04.12.2023: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி,கடலூர்,திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
05.12 2023: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புயல் தொடர்பான உடனடி அறிவிப்புகளை தெரிந்துக்கொள்ளவும், மீன்வர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகளை காணவும் Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தை காண அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் காண்க: