தமிழகம் மற்றும் புதுவையில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை இருக்கும் என்பதையும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் இன்றும் நாளையும் 2-3 டிகிரி வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 37-38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். தமிழகத்தில் ஏப்ரல் 16- 18-ஆம் தேதி அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றமில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 103 டிகிரி வரை இருக்கும். ஆந்திரபிரதேச கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதே நேரத்தில் சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும். இதனால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம்.
தமிழகத்தில் நேற்று திருத்தணியில் அதிகபட்சமாக 101.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், மதுரையில் 101.3 டிகிரியும், ஈரோட்டில் 101.1 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியிருந்தது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக வேலூர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதுரை மாவட்டம் மேலூர், கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினா விளை, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 14-04-2025 முதல் 17-04-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை. வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்: 14-04-2025 முதல் 17-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related links: