கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல் மே மாதமும் அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் பிப்ரவரி மாதத்தில் நிலவிய வானிலை நிலவரங்கள் குறித்து தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நிலவும் சராசரி அதிகபட்ச வெப்பநிலையை விட 1.73 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் கடந்த 63 ஆண்டுகளில் பிப்ரவரி மாதம் நிலவிய மூன்றாவது அதிகப்பட்ச சராசரி வெப்பநிலையாக இந்தாண்டு பதிவாகியுள்ளது. கடந்த செவ்வாய் அன்று நகரின் அதிகப்பட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது வழக்கத்தை விட 7 புள்ளிகள் அதிகம். பிப்ரவரி மாதம் டெல்லியில் நிலவிய சராசரி அதிகபட்ச வெப்பநிலை 27.7 டிகிரி செல்சியஸ்.
முதன்மை வானிலை நிலையமான சஃப்தரஜங் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 63 ஆண்டுகளில் பிப்ரவரி மாதம் டெல்லியில் பதிவான சராசரி வெப்பநிலையின் நிலவரம் பின்வருமாறு- 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத சராசரி வெப்பநிலை 27.9 டிகிரி செல்சியஸ், 2006 ஆம் ஆண்டு 29.7 டிகிரி செல்சியஸாகவும், 2023 ஆம் ஆண்டு 27.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
மார்ச் 2023-ல் மத்திய இந்தியா வழியாக ஒரு வெப்ப அலை கடக்க சிறிய வாய்ப்பு உள்ளது. அதனடிப்படையில் மார்ச் முதல் மே 2023 வரை வழக்கத்தை விட அதிகமான வெப்பம் பதிவாகலாம் எனவும், உயரும் வெப்பநிலைக்கு ஏற்ப பொதுமக்கள் தங்களே தயார்படுத்திக்கொள்ளவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் சார்பிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்பு, தாக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில் சுகாதார மையங்களில் குளிர்சாதனங்கள் முறையாக வரும் மாதங்களில் செயல்பட தங்கு தடையற்ற மின் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள், ஜஸ் பேக் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
உலை கொதிக்குமா இனி? வீட்டு, வணிக சிலிண்டரின் விலை கிடுகிடு உயர்வு
புத்தூரில் ஒருங்கிணைந்த விதைச்சான்று மையம்- நிம்மதி பெருமூச்சு விட்ட 3 மாவட்ட விவசாயிகள்