(2023-24) ஆம் ஆண்டிற்கான பாரம்பரிய காய்கறிகள் விதைகளை மீட்டெடுக்கும் சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான விவசாயிகள் உரிய முறையில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டெடுக்கும் விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான விருதிற்கு தகுதியுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதிற்கு தகுதியான விவசாயிகள் யார்? விருதிற்கு எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறையும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
விருதிற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கான விருதிற்கு சொந்த/குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பங்குப்பெறலாம். துறை இணையத்தளமான www.tnhorticulture.tn.gov.in மற்றும் மாவட்ட அலுவலங்களில் விவசாயிகள் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வட்டாரம்/மாவட்ட அலுவலங்களில் சமர்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்று மாவட்ட குழுவின் ஆய்விற்கு சமர்பிக்க வேண்டும். மாவட்ட குழுவானது மாவட்ட ஆட்சியர் தலைமையில், தோட்டக்கலை இணை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோர் அடங்கிய மாவட்ட அளவிலான தேர்வுக்குழு, மாவட்ட அளவிலான விருது பெறும் இரண்டு விவசாயிகளை ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கும்.
இதில் கவனிக்கப்படும் விஷயங்கள் பின்வருமாறு-
- விவசாயிகள் அதிக பாரம்பரிய காய்கறி இரகங்களை மீட்டெடுத்திருக்க வேண்டும்
- பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல்
- நீர் மேலாண்மை நுட்பம் (நுண்ணீர் பாசனம்/ பண்ணைக்குட்டை/ நிலப்போர்வை/ பிற நுட்பங்கள்)
- சாகுபடி நுட்பங்கள்( ஊடுப்பயிர்/ கலப்புப்பயிர்/ பல அடுக்குப் பயிர்/ பிற நுட்பங்கள்)
- முறையான மண்வள மேம்பாடு
- அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப படிவத்தில் நிலத்தின் புகைப்படங்கள் தொடர்பான பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.
பரிசுத்தொகை எவ்வளவு?
மாவட்ட அளவிலான விருது வென்றவர்கள் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்படுவார்கள். அரசு நிகழ்வு/விழாக்களின் போது சான்றிதழ்களுடன் வங்கி வரையோலையாக (DD) விருது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.15,000/-ம், இரண்டாம் பரிசாக ரூ.10,000/-ம் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளுக்கு உட்பட்ட தகுதியான விவசாயிகளாக நீங்கள் இருப்பின் விருதிற்கு விண்ணப்பிக்கும் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதனை க்ளிக் செய்து அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து மாவட்ட/ வட்டார வேளாண் அலுவலகங்களில் சமர்பிக்கவும்.
மேலும் காண்க:
என் விதியை நானே எழுதுறேன்- பெண் விவசாயி ராமாவின் வெற்றிக் கதை